இஃது
உரிப்பொருள் மயங்கு மென்றலின் மேலனவற்றிற்குப் புறனடை.
(இ-ள்)
திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே ‘மாயோன் மேய’ (5) என்பதனுள் ஒரு நிலத்து
ஓரொழுக்கம் நிகழுமென நினைத்துக் கூறிய ஒழுக்கம் அவ்வந்நிலத்திற்கே உரித்தா யொழுகாது தம்முள் மயங்கிவருதலும் நீக்கப்படா; நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிப - அங்ஙனம் ஒருநிலத்து இரண்டொழுக்கந் தம்முள் மயங்குதலன்றி இரண்டு நிலம் ஒரோவொழுக்கத்தின்கண் மயங்குதல் இல்லை என்று கூறுவர்; புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - அங்ஙனம் நிலனும் ஒழுக்கமும் இயைபுபடுத்துச் செய்யும் புலனெறி வழக்கத்தினை. மெய் பெற உணர்ந்த அறிவினையுடையோர் எ-று.
என்றது, ஒரு
நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கி வருமென்பதூஉம், நிலன் இரண்டு மயங்காவெனவே காலம் இரண்டு தம்முள் மயங்குமென்பதுஉங் கூறினாராயிற்று. ஆகவே, ஒரு நிலமே மயங்குமாறாயிற்று. உரிப்பொருண் மயக்குறுதல் என்னாது திணை மயக்குறுதலும் என்றார், ஓர் உரிப் பொருளோடு ஓர் உரிப்பொருள் மயங்குதலும், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே காலம் மயங்குதலும், கருப்பொருள் மயக்குதலும் பெறுமென்றற்கு, திணையென்றது அம் மூன்றனையுங் கொண்டே நிற்றலின்.
உ-ம்:
‘‘அறியே மல்லே மறிந்தன மாதோ பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாந்த நாறு நறியோள் கூந்த னாறுநின் மார்பே தெய்யோ’’
(ஐங்குறு.240)
இது புறத்தொழுக்க மின்றென்றாற்குத் தோழி கூறியது.
‘‘புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை வளைவெண் மருப்பிற் கேழல் புரக்குங் குன்றுகெழு நாடன் மன்றதன் பொன்போல் புதல்வனோ டென்னீத் தோனே’’
(ஐங்குறு.265)
இது வாயில்களுக்குத் தலைவி கூறியது.
‘‘வன்கட் கானவன் மென்சொன் மடமகள் புன்புல மயக்கத் துழுத வேனற் பைம்புறச் சிறுகிளி கடியு நாட பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே’’
(ஐங்குறு.283)
இது தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப் பள்ளி யிடத்துச் சென்ற தோழி கூறியது.
இவை குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தன;
|