நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2404
Zoom In NormalZoom Out


ராயினார்.

உ-ம்:

‘‘அறத்துறைபோ லாரெயில் வேட்ட வரசர்
மறத்துறையு மின்னாது மன்னோ - நிறைச்சுடர்க
ளொன்றி வரப்பகல்வா யொக்க வொளிதேய்ந்தாங்
கின்றிவர் வீழ்ந்தா ரெதிர்ந்து’’

என வரும்.

இது  வேறு  வேறு   வருதலுஞ்   சிறுபான்மை.  இன்னுந் ’துறை’
யென்றதனானே  புறத்தோன்  கவடிவித்துதலுந்  தொகை  நிலைப்பாற்
பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க.

அது, ‘‘மதியேர் வெண்குடை’’ என்னும் (392) புறப்பாட்டினுள்,

‘‘வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிதெனச்
சென்றியா னின்றென னாக’’

என வரும்.

‘ஒன்ற’ வென்றதனான் அகத்தோன்  வாண்மண்ணுதல் சிறுபான்மை
என்று கொள்க.

இனி  மகண்மறுத்தோன் மதிலை முற்றுதன் மகட்பாற் காஞ்சிக்கண்
அடங்கும்.    யானையுங்   குதிரையும்   மதிற்போர்க்குச்   சிறந்தன
அன்மையிற்  கொள்ளாராயினர்.  ஈரடியிகந்து பிறக்கடி யிடுதலுங்கேடு
என்று உணர்க.                                         (13)

தும்பை நெய்தலது புறனாதல்
 

69.தும்பை தானே நெய்தலது புறனே.
 

இது   தும்பைத்திணை      அகத்திணையுள்      இன்னதற்குப்
புறனாமென்கின்றது.   இதுவும்   மைந்து  பொருளாகப்  பொருதலின்
மண்ணிடையீடாகப்  பொரும்  வஞ்சிக்கும் மதிலிடையீடாகப் பொரும்
உழிஞைக்கும்பிற் கூறினார்.

(இ-ள்.) தும்பைதானே நெய்தலது  புறனே  -  தும்பை  யென்னும்
புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாகும் எ-று

தும்பை  யென்பது  சூடும்  பூவினாற் பெற்ற பெயர். நெய்தற்குரிய
பெருமணலுலகம்  போலக்  காடும் மலையுங் கழனியு மல்லாத களரும்
மணலும்    பொருகளமாக    வேண்டுதலானும்,   பெரும்   பொழுது
வரைவின்மையானும்,     எற்பாடு       போர்த்தொழில்     முடியுங்
காலமாதலானும்,     இரக்கமுந்     தலைமகட்கே    பெரும்பான்மை
உளதாயவாறு    போலக்   கணவனை    இழந்தார்க்கன்றி   வீரர்க்கு
இரக்கமின்மையானும்,     அவ்வீரக்குறிப்பின்   அருள்பற்றி   ஒருவர்
ஒருவரை  நோக்கிப்   போரின்கண்  இரங்குப  வாகலானும், ஒருவரும்
ஒழியாமற்    பட்டுழிக்   கண்டோர்   இரங்குப   வாகலானும்   பிற
காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று.              (14)

தும்பைத்திணையது பொது இலக்கணம்
 

70.மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப.
 

இஃது அத்தும்பைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) மைந்து பொருளாக வந்த வேந்தனை - தனது வலியினை
உலகம்  மீக்கூறுதலே தனக்குப் பெறு பொருளாகக் கருதி மேற்சென்ற
வேந்தனை;  சென்று  தலையழிக்குஞ்  சிறப்பிற்றென்ப  - அங்ஙனம்
மாற்றுவேந்தனும்  அவன்  கருதிய  மைந்தே தான் பெறு பொருளாக
எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க்குஞ் சிறப்பினை யுடைத்து