நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2405
Zoom In NormalZoom Out


அத்தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று.

வரல் செலவாதல் ‘‘செலவினும் வரவினும்’’ (தொல். சொல். கிளவி.
28)   என்பதன்   பொதுவிதியாற்   கொள்க.    ‘மைந்து  பொருளாக’
என்பதனை  வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட்டுக, அஃது
இருவர்க்கும்    ஒத்தலின்.    எனவே    இருவரும்    ஒருகளத்தே
பொருவாராயிற்று.

இது வேந்தனைத் தலைமையாற்  கூறினாரேனும்  ஏனையோர்க்குங்
கொள்க, அவரும் அதற்குரியராதலின்.

இதனைச்  சிறப்பிற் றென்றதனான் அறத்திற் றிரிந்து வஞ்சனை யாற்
கொல்வனவும் தேவராற் பெற்ற வரங்களாற் கொல்வனவும்,  கடையூழிக்
கட்டோன்றிய   ஆதலிற்   சிறப்பிலவாம்.   அவையுஞ்   சிறுபான்மை
கொள்க.                                                 (15)

தும்பைக்குரிய சிறப்புவிதி
 

71.கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற்
சென்ற வுயிரி னின்ற யாக்கை
யிருநிலந் தீண்டா வருநிலை வகையோடு
இருபாற் பட்ட வொருசிறப் பின்றே.
 

இது   தும்பைக்காவதோர்   இலக்கணங்    கூறுதலின்    எய்திய
தன்மேற்சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்.)  கணையும்  வேலும்  துணையுற  மொய்த்தலின் - பலரும்
ஒருவனை  அணுகிப்  பொருதற்கஞ்சி  அகல  நின்று அம்பானெய்தும்
வேல்கொண்டெறிந்தும்    போர்    செய்ய,    அவ்வம்பும்   வேலும்
ஒன்றோடொன்று   துணையாகத்   தீண்டுமாறு   செறிதலின்;  சென்ற
உயிரின்  நின்ற யாக்கை. சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது
நிலைநின்ற உடம்பு; இருநிலந் தீண்டா யாக்கை அருநிலை வகையோடு
-   வாளுந்   திகிரியு  முதலியவற்றான்  ஏறுண்ட  தலையேயாயினும்
உடலேயாயினும்   பெரிய   நிலைத்தைத்   தீண்டாதெழுந்து  ஆடும்
உடம்பினது   பெறற்கரு  நிலையுடைத்தாகிய  கூறுபாட்டோடே  கூடி;
இருபாற்பட்ட    ஒரு    சிறப்பின்று.    இரண்டு   கூறுபட்ட   ஒரு
சிறப்பிலக்கணத்தை யுடைத்து முற்கூறிய தும்பைத்திணை எ-று.

எனவே,  முற்கூறிய  மைந்துபொருளாகப்  பொருதலினும்   நின்ற
யாக்கை  சிறத்தலும்  இருநிலந்  தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலுங்
கூறினார்.  இது  திணைச்  சிறப்புக்  கூறியது. மொய்த்தலி னென்றது,
யாக்கை   யற்றாட   வேண்டுதலிற்,   கணையும்  வேலுமன்றி  வாள்
முதலியனவும் ஏதுவாகக் கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும்
ஊருமாறு    போல்,   அலீகன்இற   அற்றுழியும்   உடம்பாடுதலின்,
அட்டையாடலெனவும் இதனைக் கூறுப.

இனி  மேற்றுறை  கூறுகின்றது    மைந்துபொருளாக   வந்ததுஞ்
சென்றதுமாகிய பொது இலக்கணத்திற்கே என்றுணர்க.