|
ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.
அவற்றுட் பிரமமாவது: ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத் தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது.
“கயலே ரமருண்கண் கன்னிபூப் பெய்தி
அயல்பே ரணிகலன்கள் சேர்த்தி - இயலின்
நிரலொத்த அந்தணற்கு நீரிற் கொடுத்தல்
பிரமமண மென்னும் பெயர்த்து.”
பிராசாபத்தியமாவது: மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார்
கொடுத்த பரிசத்து இரட்டி தம்மகட்கு ஈந்து கொடுப்பது.
“அரிமத ருண்கண் ஆயிழை யெய்துதற்கு
உரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி
திருவின் தந்தை திண்ணிதிற் சேர்த்தி
அரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல்
பிரித லில்லாப் பிராசா பத்தியம்.”
ஆரிடமாவது: தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது.
“தனக்கொத்த வொண்பொருள் தன்மகளைச் சேர்த்தி
மனைக்கொத்த மாண்புடையாற் பேணி - இனக்கொத்த
ஈரிடத் தாவை நிறீஇயிடை ஈவதே
ஆரிடத்தார் கண்டமண மாம்.”
தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒருவற்கு
அவ்வேள்வித்தீ முன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது.
“நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த
வேள்வி விளங்கழல் முன்நிறீஇக் - கேள்வியாற்
கைவைத்தாம் பூணாளைக் காமுற்றாற் கீவதே
தெய்வ மணத்தார் திறம்.”
ஆசுரமாவது: கொல்லேறு கோடல், திரிபன்றியெய்தல்,
வில்லேறுதல் முதலியன செய்து கோடல்.
“முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத்
தகைநலங் கருதுந் தருக்கினி ருளரெனின்
இவையிவை செய்தாற் கெளியள்மற் றிவளெனத்
தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித்து
அன்னவை யாற்றிய அளவையின் தயங்கல்
தொல்நிலை அசுரந் துணிந்த வாறே.”
இராக்கதமாவது: தலைமகள் தன்னினுந் தமரினும் பெறாது
வலிதிற் கொள்வது.
“மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர்
|