|
வலிதிற்கொண்டாள்வதே என்ப - வலிதிற்
பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோள்
இராக்கதத்தார் மன்ற லியல்பு.”
பைசாசமாவது: மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும்,
இழிந்தோளை மணஞ்செய்தலும், ஆடை மாறுதலும், பிறவுமாம்.
“எச்சார்க் கெளியர் இயைந்த காதலர்
பொச்சாப் பெய்திய பொழுதுகொள் அமையத்து
மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பின்
உசாவார்க் குதவாக் கேண்மை
பிசாசர் பேணிய பெருமைசால் இயல்பே.”
“இடைமயக்கஞ் செய்யா இயல்பினில் நீங்கி
உடைமயக்கி உட்கறுத்தல் என்ப - உடையது
உசாவார்க் குதவாத ஊனிலா யாக்கைப்
பிசாசத்தார் கண்டமணப் பேறு.”
இனிக் கந்தருவமாவது: கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தது போலத் தலைவனுந் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது.
“அதிர்ப்பில்பைம் பூணாரும் ஆடவரும் தம்முள்
எதிர்ப்பட்டுக் கண்டியைதல் என்ப-கதிர்ப்பொன்யாழ்
முந்திருவர் கண்ட முனிவறு தண்காட்சிக்
கந்திருவர் கண்ட கலப்பு.”
என இவற்றானுணர்க.
களவொழுக்கம் பொதுவாகலின் நான்கு வருணத்தார்க்கும் ஆயர்
முதலியோர்க்கும் (21) உரித்து, மாலைசூட்டுதலும் இதன் பாற்படும். வில்லேற்றுதல் முதலியன பெரும்பான்மை அரசர்க் குரித்து. அவற்றுள் ஏறுதழுவுதல் ஆயர்க்கே சிறந்தது. இராக்கதம் அந்தணரொழிந்தோர்க்கு உரித்து; வலிதிற் பற்றிப் புணர்தலின் அரசர்க்கு இது பெருவரவிற்றன்று. பேய் இழிந்தோர்க்கே உரித்து. கந்தருவரின் மக்கள் சிறிது திரிபுடை மையிற் சேட்படை முதலியன உளவா மென்றுணர்க.
அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளான் இன்பநுகர்தற்
சிறப்பானும் அதனான் இல்லறங் கூறலானும் இன்பம் முற்கூறினார். அறனும் இன்பமும் பொருளாற் பெறப்படுதலின் அதனை இடைவைத்தார். போகமும் வீடுமென இரண்டுஞ் சிறத்தலிற் போகம் ஈண்டுக் கூறி வீடு பெறுதற்குக் காரணம் முற்கூறினார். ஒழிந்த மணங் கைக்கிளையுங் பெருந்திணையுமாய் அடங்குதலின் இதனை ‘அன்பொடு’ என்றார். இயைதலின் கந்தருவப் பாற்படும்.
|