|
பலபிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று. இங்ஙனம்
ஒருமை கூறிற்றேனும் ‘ஒருபாற்கிளவி’ (தொல்.பொ.222) என்னுஞ்
சூத்திரத்தான் நால்வகை நிலத்து நான்கு வருணத்தோர் கண்ணும் ஆயர் வேட்டுவர் முதலியோர் கண்ணுங் கொள்க. இச்சூத்திரம்
‘முன்னைய நான்கும்’ (தொல்.பொ.52) எனக்கூறிய காட்சிக்கு இலக்கணங் கூறிற்றென் றுணர்க.
உ-ம்:
“கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா
அரும்பிவர் மென்முலை தொத்தாப் - பெரும்பணைத்தோள்
பெண்டகைப் பொலிந்த பூங்கொடி
கண்டேங் காண்டலுங் களித்தஎங் கண்ணே”
(புற.வெ.மாலை.கைக்.1)
இக்காட்சிக்கண் தலைவனைப்போல் தலைவி வியந்து கூறுதல்
புலனெறிவழக்கன்மை உணர்க. (2)
ஐயம் நிகழுமிட மிதுவெனல்
92. சிறந்துழீ ஐயஞ் சிறந்த தென்ப
இழிந்துழி யிழிபே சுட்டலான.
இஃது எய்தாத தெய்துவித்து எய்தியது விலக்கிற்று, ‘முன்னைய
நான்கும்’ (தொல்.பொ.52) என்றதனாற் கூறிய ஐயந் தலைவன்
கண்ணதே எனவுந் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலுங் கூறலின்.
(இ-ள்.)
சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப - அங்ஙனம் எதிர்ப்
பாட்டின் இருவருள்ளுஞ் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல்
சிறந்ததென்று கூறுவர் ஆசிரியர்; இழிந்துழி இழிபே சுட்டலான - அத் தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள் கருதும் ஆதலான் எ-று.
தலைவற்குத் தெய்வமோ அல்லளோவென நிகழ்ந்த ஐயம், நூன்
முதலியவற்றான் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு
அறிவுடையனாதலானுந், தலைவிக்கு, முருகனோ இயக்கனோ மகனோவென ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனங் கூறினார். தலைவிக்கு, ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக்குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல் பற்றிச் ‘சிறந்துழி’ என்றார்.
உ-ம்:
“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு.” (குறள்.1081)
எனவரும். (3)
ஐய நீங்கித் தெளிதற்குரிய காரணம் இவையெனல்
94. வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்(று)
அன்னவை பிறவும் ஆங்கவண் நிகழ
நின்றவை களையுங் கருவி யென்ப.
இஃது ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சியாதலின் ஆராயும் கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தனவன்றி மண்ணகத்தனவாதல் நூற்கேள்வியானும்
|