|
உரையிற் கோடலான் மொழிகேட்க விரும்புதலுங் கூட்டிய
தெய்வத்தை வியந்து கூறுதலும் வந்துழிக் காண்க.
தலைவன்கண் உள்ளப்புணர்ச்சி மாத்திரைநிகழ்தலு
முண்டென்றற்குக் காரணங் கூறல்
98. பெருமையும் உரனும் ஆடூஉ மேன.
இத்துணை மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே கூறி, இனி உள்ளப்
புணர்ச்சியே நிகழ்ந்துவிடும் பக்கமும் உண்டென்பதூஉம் இவ்விருவகைப் புணர்ச்சிப் பின்னர்க் களவின்றி வரைந்து கோடல் கடிதின் நிகழ்தலுண்டென்பதூஉம் உணர்த்துகின்றது.
(இ-ள்.) பெருமையும் - அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும்
ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும்; உரனும் - கடைப்பிடியும் நிறையுங் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும்; ஆடூஉ மேன - தலைவன் கண்ண எ-று.
இதனானே உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும்
உலக வழக்கும் மெய்யுறுபுணர்ச்சி நிகழ்ந்துழியுங் களவு நீட்டியாது வரைந்துகோடலும், உள்ளஞ் சென்றுழியெல்லாம் நெகிழ்ந்தோடாது ஆராய்ந்து ஒன்று செய்தலும், மெலிந்த உள்ளத்தானாயுந் தோன்றாமல் மறைத்தலுந், தீவினையாற்றிய பகுதியிற் சென்ற உள்ளம் மீட்டலுந் தலைவற்கு உரியவென்று கொள்க.
“சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு” (குறள்.422)
எனவரும்.
பெருமை நிமித்தமாக உரன் பிறக்கும், அவ்வுரனான் மெய்யுறு
புணர்ச்சி இலனாதலும் உரியனென இதுவும் ஒரு விதி கூறிற்று. தலைவிக்கு மெய்யுறு புணர்ச்சி நடக்கும் வேட்கை நிகழாமைக்கும் காரணம் மேற் கூறுப. இனி இயற்கைப்புணர்ச்சி இடையீடு பட்டுழி இடந்தலைப்பாட்டின்கண் வேட்கை தணியாது நின்று கூடுபவென்றும், ஆண்டும் இடையீடு பட்டுழிப்பாங்கனாற் கூடுபவென்றும், உரைப்போரும் உளர்; அவர் அறியாராயினார்; என்னை? அவ்விரண்டிடத்தும் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய மெய்ப்பாடுகள் நிகழ்ந்தே கூட வேண்டுதலின் அவற்றையும் இயற்கைப் புணர்ச்சியெனப் பெயர் கூறலன்றிக் காமப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலும் என ஆசிரியர் வேறு வேறு பெயர் கூறாரென்றுணர்க. (7)
தலைவிகண்ணும் அவ்வுள்ளப்புணர்ச்சியளவில்
நிகழ்தற்குக் காரணங் கூறல்
99. அச்சமும் நாணும் மடனுமுந்துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.
இது, மேலதே போல்வதொரு விதியை உள்ளப்புணர்ச்சி பற்றித்
|