நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2491
Zoom In NormalZoom Out


 

தலைவிக்குக் கூறுகின்றது.

(இ-ள்.) அச்சமும் - அன்பு காரணத்திற்றோன்றிய உட்கும்; நாணும்
-  காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப்படுவதோர் உள்ளவொடுக்கமும்; மடனும்
- செவிலியர் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையும்; முந்துறுத்த
-   இம்மூன்று  முதலியன;  நிச்சமும்  பெண்பாற்கு  உரிய  என்ப  -
எஞ்ஞான்றும் பெண்பாலார்க்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

‘முந்துறுத்த’ என்றதனாற் கண்டறியாதன கண்டுழி மனங் கொள்ளாத
பயிர்ப்பும்,   செயத்தகுவது   அறியாத   பேதைமையும்,  நிறுப்பதற்கு
நெஞ்சுண்டாம்    நிறையுங்    கொள்க.    மடன்    குடிப்பிறந்தோர்
செய்கையாதலின்   அச்சமும்  நாணும்போல  மெய்யுறு  புணர்ச்சியை
விலக்குவதாம்.    தலைவி   இவற்றை   உடையளெனவே   தலைவன்
பெருமையும்  உரனும் உடையனாய் வேட்கை மீதூரவும் பெறுமாயிற்று.
இவை   இவட்கு   என்றும்   உரியவாயின்  இயற்கைப்  புணர்ச்சிக்கு
உரியளல்லளாமாயினும்   இவ்விலக்கணத்தின்   திரியாது   நின்றேயும்
புணர்ச்சிக்கு உரியளாமென்றற்குப் பன்னிரண்டு மெய்ப்பாடுங் கூறினார்.
இவற்றானே,  புணர்ச்சி  பின்னர்ப்  பெறுதுமெனத் தலைவனைப்போல
ஆற்றுவாளாயிற்று.  இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த வழியெல்லாங்
கந்தருவமென்பது   வேத   முடிபாதலின்  இவ்வுள்ளப்  புணர்ச்சியுங்
கந்தருவமாம்  ஆதலான்  அதற்கு  ஏதுவாகிய  ‘பெருமையும் உரனும்’
‘அச்சமும் நாணும்’ போல்வன கூறினார். இச்சூத்திரம் இரண்டும் நாடக
வழக்கன்றிப்    பெரும்பான்மை    உலகியல்    வழக்கே   கூறலின்,
இக்கந்தருவம்     இக்களவியற்குச்     சிறப்பன்று,    இனிக்கூறுவன
மெய்யுறுபுணர்ச்சி பற்றிய களவொழுக்கமாதலின்.                (8)

களவிற்குரிய பொதுவிலக்கணம் இவையெனல்

100. வேட்கை யொருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றச்
சிறப்புடை மரபினவை களவென மொழிப

இது  முதலாகக்  களவிலக்கணங்  கூறுவார்.  இதனான் இயற்கைப்
புணர்ச்சிமுதற்  களவு  வெளிப்படுந்துணையும்  இருவர்க்கும் உளவாம்
இலக்கணம் இவ்வொன்பது மெனப் பொதுவிலக்கணங் கூறுகின்றார்.

(இ-ள்.)  ஒருதலைவேட்கை -  புணராதமுன்னும் புணர்ந்த பின்னும்
இருவர்க்கும்  இடைவிட்டு  நிகழாது  ஒரு  தன்மைத்தாகி நிலைபெறும்
வேட்கை;  ஒருதலை  உள்ளுதல்  -  இடைவிடாது ஒருவர் ஒருவரைச்
சிந்தியாநிற்றல்;