நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2497
Zoom In NormalZoom Out


 

தோழியிற்    கூட்டமும்    நிகழுமிடத்துத்     தலைவன்     கூற்று
நிகழ்த்துமாறும்  ஆற்றாமை  கையிகந்து கலங்கியவழி அவன் மடன்மா
கூறுமாறுங்  கூறுகின்றது.  இதுனுள்  ‘இரு  நான்கு கிளவியும்’ என்னுந்
துணையும் இடந்தலைப்பாடும் ‘வாயில் பெட்பினும் என்னுந் துணையும்
பாங்கற்கூட்டமும் ஒழிந்தன தோழியிற் கூட்டமுமாம்.

(இ-ள்.)   மெய்தொட்டு   பயிறல்   -   தலைவன்   தலைவியை
மெய்யைத் தீண்டிப் பயிலாநிற்கு நிலைமை:

இஃது   என்ன   என்றால்,   இயற்கைப்   புணர்ச்சிப்  பின்னர்ப்
பெருநாணினளாகிய  தலைமகள்  எதிர்நிற்குமோவெனின் தான் பிறந்த
குடிக்குச்   சிறந்த   வொழுக்கத்திற்குத்   தகாதது   செய்தாளாதலின்,
‘மறையிற்  றப்பா  மறையோ  னொருவனைக்  கண்ட மறையிற் றப்பிய
மறையோன்’     போலவும்     ‘வேட்கைமிகுதியான்     வெய்துண்டு
புண்கூர்ந்தார்’   போலவும்   நெஞ்சும்   நிறையுந்   தடுமாறி  இனிச்
செயற்பாலதியாதென்றும்,   ஆயத்துள்ளே   வருவான்கொல்  என்னும்
அச்சங்கூரவும்   வாரான்கொல்   என்னும்  காதல்கூரவும்,  புலையன்
றீம்பால்போல்  மனங்கொள்ளா  அனந்தருள்ளம்  உடையளாய், நாணு
மறந்து   காதலீற்ப்பச்   செல்லும்;  சென்று  நின்றாளைத்  தலைவன்
இவ்வொழுக்கம்  புறத்தார்  இகழப் புலனாய் வேறுபட்டாள் கொல்லோ
எனவும்,   அங்ஙனம்   மறைபுலப்படுதலின்   இதனினூங்கு  வரைந்து
கொள்ளினன்றி   இம்மறைக்கு  உடம்படாளோ  வெனவுங்  கருதுமாறு
முன்புபோல்    நின்ற    தலைவியை   மெய்யுறத்   தீண்டி   நின்று
குறிப்பறியுமென்றற்குத் தொடுமென்னாது பயிறலென்றார்.

பொய்     பாராட்டல்  -  அங்ஙனந்  தீண்டிநின்றுழித்   தலைவி
குறிப்பறிந்து  அவளை  ஓதியும்  நுதலும்  நீவிப் பொய்செய்யா நின்று
புனைந்துரைத்தல்:

சிதைவின்றேனுஞ் சிதைந்தனபோல் திருத்தலிற் பொய் யென்றார்.

இடம்பெற்றுத்தழாஅல்  -   அவ்விரண்டனானுந்தலைவியை  முகம்
பெற்றவன்  அவள்  நோக்கிய நோக்கினைத் தன்னிடத்திலே சேர்த்துக்
கொண்டு கூறல்:

இடையூறு   கிளத்தல்  -  அவள் பெருநாணினளாதலின் இங்ஙனங்
கூறக்கேட்டுக்   கூட்டத்திற்கு  இடையூறாகச்  சில  நிகழ்த்தியவற்றைத்
தலைவன் கூறல்:

அவை கண்புதைத்தலுங் கொம்பானுங் கொடியானுஞ் சார்தலுமாம்:

நீடுநினைந்திரங்கல்  -  புணர்ச்சி  நிகழாது  பொழுது  நீண்டதற்கு
இரங்கி இரக்கந்தோன்றக் கூறல்: