நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2499
Zoom In NormalZoom Out


 

கடைமணி சிவந்தநின்
கண்ணே தவ அல்ல நண்ணார்
ஆண்டலை மதில ராகவு முரசுகொண்டு
ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்
பெரும்பெயர்க் கூட லன்னநின்
கரும்புடைத் தோளு முடையவா லணங்கே.”      (நற்.39)

இஃது,  அங்ஙனம்  மெய்தீண்டி  நின்றவன் யான் தழீஇக் கொண்டு
கூறின்  அதனை  ஏற்றுக்கொள்ளாயாய்  இறைஞ்சி  நின்று நாணத்தாற்
கண்ணைப்  புதைத்தியென  ‘இடையூறு  கிளத்தல்’ கூறிக் காமங் கைம்
மிகிற்றாங்குத  லெளிதோவென ‘நீடுநினைந்திரங்கல்’ கூறிப் புலியினைத்
தோய்ந்து    சிவந்த    கோடு    போல    என்னிடைத்   தோய்ந்து
காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணெனக் கூடுதலுங் கூறிற்று.

இனித் தனியே வந்தன:

“கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக் கிடுகு மிடையிழவல் கண்டாய்”
                               (சிலப். கானல்வரி.17)

இது பொய் பாராட்டல்.

“கொல்யானை வெண்மருப்புங் கோள்வல் புலியதளும்
நல்யாணர் நின்னையர் கூட்டுண்டு - செல்வார்தாம்
ஓரம்பி னாயெய்து போக்குவர்யான் போகாமை
ஈரம்பி னாலெய்தா யின்று.”             (திணை.நூற்.22)

இஃது இடம்பெற்றுத் தழாஅல்.

“இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி
முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே
புலம்புகொண் மாலை மறைய
நலங்கே ழாகம் நல்குவ ளெனக்கே.”        (ஐங்குறு.197)

இது கூடுதலுறுதல்.

“வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்.”             (குறள்.1105)

இது நுகர்ச்சி பெற்றது.

“எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறுஞ்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே.”                (குறுந்.53)

இதனுள்  தீராத்தேற்றத்தைப்  பின்னொருகால்  தலைவி   தேர்ந்து
தெளிவொழித்துக் கூறியவாறு காண்க.

இயற்கைப்  புணர்ச்சிக்கண்  தலைவி கருத்தெல்லாம் உணர்ந்தானா
யினுங் காவன்மிகுதியானுங் கரவுள்ளத்தானும் இரண்டாங் கூட்டத்தினும்
அவள்நிலை  தெளியாது ஐயுறுதலுங் கூறி, மூன்றாவதாய் மேல் நிகழும்
பாங்கற்கூட்டத்தின்   பின்   நிகழும்  இடந்தலைப்பாட்டினும்  ஐயுறவு
உரித்தென்று மெய் தொட்டுப் பயிறன் முதலியன அதற்குங் கூறினார்.