நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2500
Zoom In NormalZoom Out


 

அன்றியும்     மக்களெல்லாம்    முதல்    இடை    கடை    யென
மூவகைப்படுதலின்    அவர்க்கெல்லாம்   இது   பொதுவிதியாகலானும்
அமையும்.

“எண்ணிய தியையா தாங்கொல் கண்ணி
அவ்வுறு மரபி னுகர்ச்சி பெறுகென
வரிவண் டார்க்கும் வாய்புகு கடா அத்த
அண்ணல் யானை யெண்ணருஞ் சோலை
விண்ணுயர் வெற்பினெம் அருளி நின்னின்
அகலி னகலுமெ னுயிரெனத் தவலில்
அருந்துய ரவலமொ டணித்தெம் மிடமெனப்
பிரிந்துறை வமைந்த வெம்புலம்நனி நோக்கிக்
கவர்வுறு நெஞ்சமொடு கவலுங் கொல்லோ
ஆயம் நாப்பண் வருகுவன் கொல்லென
உயவுமென் னுள்ளத் தயர்வுமிக லானே.”

இது  வருவான்கொ  லென்னும்   அச்சமும்  வாரான்கொலென்னுங்
காதலுங் கூர்ந்து தலைவி கூறியது.

இனிச்  ‘சொல்லிய’  வென்றதனானே  இன்னும்  இப்புணர்ச்சி  கூடுங்
கொலெனக்  கூறுவனவும்,  இன்னும் தெய்வந் தருமெனக் கூறுவனவுந்,
தலைவியை   எதிர்ப்பட்ட   இடங்கண்டுழி  அவளாகக்  கூறுவனவுங்,
காட்சிக்கு   நிமித்தமாகிய  கிள்ளையை  வாழ்த்து  வனவுந்,  தலைவி
தனித்த நிலைமை கண்டு வியப்பனவும், முன்னர்த் தான் நீங்கிய வழிப்
பிறந்த    வருத்தங்    கூறுவனவும்,    அணியணிந்து   விடுத்தலும்,
இவைபோல்வன பிறவும் இடந்தலைப்பாட்டிற்குக் கொள்க.

உ-ம்:

“வெள்ள வரம்பி னூழி போகியுங்
கிள்ளை வாழிய பலவே யொள்ளிழை
இரும்பல் கூந்தற் கொடிச்சி
பெருந்தோட் காவல் காட்டி யவ்வே.”       (ஐங்குறு.281)

இது கிள்ளை வாழ்த்து.

“நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.”              (குறள்.1104)

இது நீங்கிய வழிப் பிறந்த வருத்தங் கூறியது.

“அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கண்
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல்
திருமணி புரையு மேனி மடவோள்
யார் மகள் கொல்லிவள் தந்தை வாழியர்
துயர முறீஇயின ளெம்மே யகல்வயல்
அரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந்
தண்சேறு தாஅய மதனுடை நோன்தாள்
கண்போ னெய்தல் போர்விற் பூக்குந்
திண்டேர்ப் பொறையன் தொண்டி
தன்திறம் பெறுகவிவ ளீன்று தாயே.”             (நற்.8)

என்பதும்  அது.  ஏனையற்றிற்குச்  சான்றோர்  செய்யுட்கள் வருவன
உளவேற் காண்க.

பெற்றவழி  மகிழ்ச்சியும்  -  சொல்லிய  நுகர்ச்சி வல்லே பெற்றுழி
அவன்  மனம்  மகிழும்  மகிழ்ச்சியும்;  பேராச்  சிறப்பினென்றதனாற்
பாங்கனான் நிகழும் இடந்தலைப்பாட்டிற்கும் இது கொள்க.

உ-ம்:

“ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீர ளாரணங் கினளே
இனைய ளென்றவட் புனையளவு அறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே”     (குறுந்.70)

என வரும்.

பிரிந்தவழிக் கலங்கலும் - அங்ஙனம் புணர்ந்து பிரிந்துழி