நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2502
Zoom In NormalZoom Out


 

யிற் கலங்குதி யெனினிம்
மண்திணி கிடக்கை மாநிலம்
உண்டெனக் கருதி யுணரலென் யானே”

எனவும் இவை நிற்பனை நினைஇக் கழறின.

“காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.”       (குறுந்.204)

இதுவும் அது.

“நயனுந் நண்புந் நாணுநன் குடைமையும்
பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும்
நும்மினும் உடையேன் மன்னே கம்மென
எதிர்த்த தித்தி யேரிள வனமுலை
விதிர்த்து விட்டன்ன அந்நுண் சுணங்கின்
ஐம்பால் வகுத்த கூந்தற் செம்பொன்
திருநுதற் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சி பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணைய லன்னவிவள்
அரிமதர் மழைக்கண் காணா வூங்கே.”          (நற்.160)

“இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
நிறுக்க லாற்றினோம் நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெ யுணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.”    (குறுந்.58)

இவை நிகழ்பவை உரைத்தன.

இப் பன்மையான் வேறுபட வருவனவெல்லாங் கொள்க.

குற்றங்   காட்டிய  வாயில்  பெட்பினும்  -  அங்ஙனந் தலைவற்கு
நிகழுங்   குற்றங்களை   வெளிப்படக்   காட்டிய   பாங்கன்  அவன்
ஆற்றாமை மிகுதி கண்டு அதனை நீக்குதற்கு விரும்பினும்:

அது நின்னாற் காணப்பட்ட  உரு  எவ்விடத்து எத்தன்மைத்து என
வினாவும்.

உ-ம்:

“பங்கய மோ துங்கப் பனிதங்கு மால்வரையோ
அங்கண் விசும்போ அலைகடலோ - வெங்கோவின்
செவ்வண்ண மால்வரையே போலுந் திருமேனி
இவ்வண்ணஞ் செய்தார்க் கிடம்.”

என வரும்.

அது கேட்டுத்   தலைவன்   கழியுவகை  மீதூர்ந்து  இன்னவிடத்து
இத்தன்மைத்து என்னும்.

உ-ம்:

“கழைபா டிரங்கப் பல்லியங் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி யன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
கழைக்க ணிரும்பொறை யேறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்க டாளங் கொட்டுமக்
குன்றகத் ததுவே குழுமிளைச் சீறூர்
சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத் ததுவேபிறர்
விடுத்தற் காகாது பிணித்தவென் னெஞ்சே.”      (நற்.95)

இஃது இடங்கூறிற்று.

“கேளிர் வாழியோ கேளிர் நாளும்என்
நெஞ்சு பிணிக்கொண்ட அஞ்சில் ஓதி
பெருநா ணணிந்த சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப்புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.”