நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2514
Zoom In NormalZoom Out


 

தென்று   தலைவியைக்   காக்க   ஏவியதனை   அறிந்த  தலைவன்,
அவளைப் பெற்றேமென மகிழ்ந்து கூறியது.

“காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.”         (குறள்.1144)

இஃது இரவுக்குறிக்கண் அவட்பெற்று மலிந்தது.

“கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக்
கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது
நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி
அரைநாள் யாமத்து விழுமழை கரந்து
கார்விரை கமழுங் கூந்தல் தூவினை
நுண்ணூ லாகம் பொருந்தினள் வெற்பின்
இளமழை சூழ்ந்த மடமயில் போல
வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து
வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூல்
அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து
துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பிற் சான்ற பெரிய
அம்மா வரிவையோ வல்லள் தெனாஅது
ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பின்
கவிரம் பெயரிய வுருகெழு கவாஅன்
நேர்மலர் நிறைசுனை யுறையும்
சூர்மகள் மாதோ என்னுமென் னெஞ்சே”      (அகம்.198)

என வரும்.

“விண்ணகம் விளக்கல் வேண்டி நம்மிற்
பிரியினும் பிரியுமோ பெருந்தோட் கொடிச்சி
வானஞ் சூடிய திலகம் போல
ஓங்கிரு விசும்பினுங் காண்டும்
ஈங்குங் காண்டும் இவள்சிறு நுதலே.”

இதுவும் அது.

ஆற்றிடை உறுதலும் - தலைவன் செல்லும்  நெறிக்கண் இடையூறு
தோன்றின இடத்தும்:

என்றது,  தலைவியுந்  தோழியும்  வருவழியருமை   கூறிய  வழித்
தலைவன் கூற்று நிகழுமென்றவாறு.

உ-ம்:

“குருதி வேட்கை யுருகெழு வயமான்
வலமிகு முன்பின் மழகளிறு பார்க்கும்
மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவி னாண்மேய லாரு
மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை
நீநயந்து வருத லெவனெனப் பலபுலந்
தழுதனை யுறையும் அம்மா வரிவை
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயிற் றோன்றி யன்னநின்
ஆய்நல முள்ளி வரினெமக்
கேம மாகு மலைமுத லாறே.”                 (நற்.132)

எனத் தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியது.

இரட்டுறமொழித  லென்பதனான், ‘ஆற்றிடையுறுத’ற்கு வரைவிடை
வைத்துப்  பிரிந்தான்  ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறுவனவுங் கொள்க.
அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் பாகற்குக் கூறுவனவுமாம்.