|
“ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றில்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே.” (குறுந்.235)
“கவலை கெண்டியவ கல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீதாஅய்ச் செல்வர்
பொன்செய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடிதந்தை யூரே.” (குறுந்.233)
அவ்வினைக்கு இயல்பே - அத்தோழியிற் கூட்டத்திடத்துத் தலைவன் கூற்று நிகழ்வதாகிய இலக்கணமாம் எ-று. (12)
உலகியலாற் புணர்க்கும் பாங்கனிமித்தம் இத்துணையவெனல்
104. பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப.
இது மேற் பாங்கிநிமித்தங் கூறிய அதிகாரத்தானே பாங்கன் நிமித்தங் கூறுகின்றார்.
‘வாயில் பெட்பினும்’ (தொல்.பொ.102) என்ற
பாங்கனிமித்தம் போலாது இது வேறுபடக் கூறலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. என்னை? பாங்கன் தலைவியை எதிர்ப்பட்டு வந்து தலைவற்கு உரைத்தலன்றிக், காளையரொடு கன்னியரை உலகியலாற் புணர்க்குமாறு புணர்க்குந் துணையே யாகலின்.
(இ-ள்.)
அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய
நிமித்தம் பன்னிரு பகுதியவாம் எ-று.
எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இரு
வகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்தமாதலின் அவை அவன்கண்ண வெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப. நிமித்தமுங் காரணமும் ஒன்று. காரணம் பன்னிரண்டெனவே காரியமும் பன்னிரண்டாம்; அவை எண் வகை மணனுமாதலின் அவற்றைக் கைக்கிளை முதலிய ஏழுதிணைக்கும் இன்னவாறு உரியவென வருகின்ற சூத்திரங்களாற் பன்னிரு பகுதியும் அடங்கக் கூறுப. அவ்வாற்றானே பிரமம் பிராசபத்தியம் ஆரிடந் தெய்வம் எனவும், முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனவும், ஆசுரம் இராக்கதம் பேய் எனவும் பன்னிரண்டாம். பிரமம் முதலிய நான்கற்கும் பாங்கன் ஏதுவாகலின் இவ்வாறு பிரமசரியங் காத்தானெனவும், இவன் இன்ன கோத்திரத்தான் ஆகலின் இவட்கு உரியனெனவும், இவளை இன்னவாற்றாற் கொடுக்கத் தகுமெனவும், இன்னோனை ஆசாரியனாகக்கொண்டு வேள்வி செய்து மற்றிக்
|