|
புணர்ச்சி நோக்கி
ஒருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோள்
அருமை சான்ற நாலிரண்டு வகையின்
பெருமை சான்ற வியல்பின் கண்ணும்
பொய்தலை யடுத்த மடலின் கண்ணும்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்
குறியி னொப்புமை மருடற் கண்ணும்
வரைவுதலை வரினும் களவறி வுறினும்
தமர்தற் காத்த காரண மருங்கினும்
தன்குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தனன் பெயர்ந்த வறுங்கள நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்
வழுவின்று நிலைஇய வியற்படு பொருளினும்
பொழுது மாறும் புரைவ தன்மையின்
அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்
காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும்
ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும்
தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்
அன்னவு முளவே யோரிடத் தான.
இதனுள் தலைவிகூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றான். சில
கூற்றுக்களுள் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் பட
நிகழ்த்தவும் பெறுமென்கின்றான். ‘அவன்வயின்’ எனவே
‘தன்’னென்றது தலைவியையாம்; உரிமை - களவிலே கற்புக்கடம்
பூண்டொழுகல்; எனவே, புலவியுள்ளத்தாளாகவும் பெறுங்
களவினென்பது கருதிப் பரத்தையுமுள என்றான்; ஊடலும்
உணர்த்தலும் வெளிப்பட நிகழாமையின் இவை புலவிப் போலி.
பரத்தை - அயன்மை. அவன்கட் பரத்தை மையின்றேனும்
காதன்மிகுதியான் அங்ஙனங் கருதுதல் பெண்தன்மை, உம்மை
எதிர்மறையாகலின் இவ்விரண்டும் இலவாதலே பெரும்பான்மை.
(இ-ள்.)
மறைந்து அவற் காண்டல் - தலைவன் புணர்ந்து
நீங்குங்கால் தன் காதன்மிகுதியான் அவன் மறையுந்துணையும் நோக்கி
நின்று அங்ஙனம் மறைந்தவனைக் காண்டற்கண்ணுந் தோழிக்குக்
கூற்றாற் கூறுதலுள:
உ-ம்:
“கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும்
வண்டற் பாவை வரிமண லயர்ந்தும்
இன்புறப் புணர்ந்து மிளிவரப் பணிந்தும்
தன்றுயர் வெளிப்படத் தவறி நந்துயர்
அறியா மையி னயர்ந்த நெஞ்சமொடு
செல்லு மன்னோ மெல்லம் புலம்பன்
செல்வோன் பெயர்புறத் திரங்கி முன்னின்று
தகைஇய சென்றவெ னிறையி னெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே யெய்தியும்
காமஞ் செப்ப நாணின்று கொல்லோ
உதுவ காணவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண்மணற் குவவுமிசை யானும்
எக்கர்த் தாழை மடல்வயி னானும்
ஆய்கொடிப் பாசடும் பரியவூர் பிழிபு
சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த
கடுஞ்செலற் கொடுந்திமில் போல
நிவந்துபடு தோற்றமொ டிகந்துமா யும்மே.” (அகம்.330)
‘அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு’ என்பது தன்வயினுரிமை;
‘இகந்து மாயும்’ என்பது அவன்வயிற் பரத்தைமை.
தற்காட்டுறுதல் - தன்னை அவன் காணாவகை நாணான் மறைந்து
ஒழுகினுந் தன் பொலிவழிவினை அவற்குக் காட்டல் வேண்டுதற்
கண்ணும்: அது,
“இன்ன ளாயினள் நன்னுத லென்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே.”
|