|
பயிற்றலின்
ஏக லடுக்கத் திருளளைச் சிலம்பின்
ஆகொள் வயப்புலி யாகுமஃ தெனத்தம்
மலைகெழு சீறூர் சிலம்பக் கல்லெனச்
சிலையுடை யிடத்தார் போதரு நாடன்
நெஞ்சமர் வியன்மார் புடைத்தென வன்னைக்
கறிவிப் பேங்கொ லறிவியேங் கொல்லென
இருபாற் பட்ட சூழ்ச்சி யொருபால்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன்னுயிர் கழிவ தாயினு நின்மகள்
ஆய்மல ருண்கட் பசலை
காம நோயெனச் செப்பா தீமே.” (அகம்.52)
இது சிறைப்புறம்.
நொந்து தெளிவு ஒழிப்பினும் - வரைவு நீட்டித்துத் தலைவன் சூளுற்றவழி அதற்கு நொந்து தெளிவிடை விலங்கினும்:
உ-ம்:
“மன்றத் துறுகற்கருங்கண் முசுவுகளும்
குன்றக நாடன் றெளித்த தெளிவினை
நன்றென்று தேறித் தெளிந்தேன் றலையளி
ஒன்றுமற் றொன்று மனைத்து” (ஐந்திணை எழு.9)
என வரும்.
“எம்மணங்கினவே.” (குறுந்.53) என்பது தலைவி கூறக்கேட்டுத்
தோழி கூறியது. அதுவும் இதனாற் கொள்க.
அச்சம் நீடினும் - தெய்வம் அச் சூளுறவிற்கு அவனை வருத்து
மென்றுந் தந்தை தன்னையர் அறிகின்றாரோ வென்றுங் கூட்ட முண்மை உணர்ந்த தோழிக்கு உண்மை கூறுதற்கும் அஞ்சிய அச்சம் நீட்டிப்பினும்:
உ-ம்:
“மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே” (குறுந்.87)
“மென்றினை மேய்ந்த சிறுகட் பன்றி
வன்க லடுக்கத்துத் துஞ்சு நாடன்
எந்தை யறித லஞ்சிக்கொல்
அதுவே தெய்ய வாரா மையே” (ஐங்குறு.261)
“புனையிழை நோக்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்தும்
மணிவரி தைஇயும்நம் மில்வந்து வணங்கியும்
நினையுபு வருந்துமிந் நெடுந்தகை திறத்திவ்வூர்
இளையளென் றெடுத்தோதற் கனையையோ நீயென
வினவுதி யாயின் விளங்கிழாய் கேளினி;
செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன்
பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ
கௌவைநோ யுற்றவர் காணாது கடுத்தசொல்
ஒவ்வாவென் றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை;
ஒடுங்கியாம் புகலொல்லேம் பெயர்தர வவன்கண்டு
நெடுங்கய மலர்வாங்கி நெறித்துத்தந் தனைத்தற்கோ
விடுந்தவர் விரகின்றி யெடுத்தசொற் பொய்யாகக்
கடிந்தது மிலையாய்நீ கழறிய வந்ததை;
வரிதேற்றாய் நீயென வணங்கிறை யவன்பற்றித்
தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்
செய்தனைத்தற்கோ
புரிபுநம் மாயத்தார் பொய்யாக வெடுத்த சொல்
உரி தென வுணராய்நீ யுலமந்தாய் போன்றதை; எனவாங்கு,
அரிதினி யாயிழா யதுதேற்றல் புரிபொருங்கு
அன்று நம் வதுவையு ணமர்செய்வ தின்றீங்கே
தானயந் திருந்ததிவ் வூராயின் எவன்கொலோ
நாஞ்செயற் பால தினி (கலி.76)
எனவரும்.
|