|
உ-ம்:
“ஓலியவிந் தடங்கி யாமம் நள்ளெனக்
கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே
தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ண வாங்குமடற் குடம்பைத்
துணைபுண ரன்றில் உயவுக்குரல் கேட்டொறும்
துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய்
நம்வயின் வருந்து நன்னுத லென்பது
உண்டுகொல் வாழி தோழி தெண்கடல்
வன்கைப் பரதவர் இட்ட செங்கோற்
கொடுமுடி யவ்வலை பரியப் போகிக்
கடுமுரண் எறிசுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்ற னெஞ்சத் தானே.” (நற்.303)
“ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரைகொண் டவையும் விரையுமாற் செலவே.” (குறுந்.92)
“கொடுந்தாள் அலவ குறையாம் இரப்பேம்
ஓடுங்கா வொலிகடற் சேர்ப்பன் - நெடுந்தேர்
கடந்த வழியையெம் கண்ணாரக் காண
நடந்து சிதையா தி நீ.” (ஐந்திணை ஐம்.42)
“முடமுதிர் புன்னைப் படுகேட் டிருந்த
மடமுடை நாரைக் குரைத்தேன் - கடனறிந்து
பாய்திரைச் சேர்ப்பன் பரித்தேர் வரக்கண்டு
நீதகா தென்றே நிறுத்து.”
என வரும்.
அவன் அளி சிறப்பினும் - தலைவிக்குக் காமமிக்க சுழிபடர்
சிறந்தாற்போல்வது தலைவன்கட் சிறந்துழி, அது காரணத்தான் அவன்
அளி சிறந்து தோன்றினும்; இவ்வாறு அரிதின் வருகின்றான்
வரைகின்றிலனென அவ்விரண்டுந் தோன்றும்.
உ-ம்:
“இருள்கிழிப் பதுபோன் மின்னி வானம்
துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக்
குரும்பி கெண்டும் பெருங்கை யேற்றை
இரும்புசெய்கொல்லெனத் தோன்று மாங்கண்
ஆறே யருமர பினவே யாறே
சுட்டுநர்ப் பனிக்குஞ் சூருடை முதலைய
கழைமாய் நீத்தங் கல்பொரு திரங்க
அஞ்சுவந் தமிய மென்னாது மஞ்சுசுமந்
தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய
இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கிற் புலர ஈர்க்கும்
வாணடந் தன்ன வழக்கருங் கவலை
யுள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி
அருள்புரி நெஞ்சமோடு எஃகுதுணை யாக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
நீதவ றுடையையும் அல்லை நின்வயின்
ஆனா வரும்படர் செய்த
யானே தோழி தவறுடை யேனே.” (அகம்.72)
‘வந்தோ னென்பது அவனளி சிறத்தல்; ‘தவறுடையே’ னென்பது
தன்வயினுரிமை; ‘கொடியனுமல்ல’னென்பது அவன்வயிற் பரத்தைமை.
“சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின்இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாதுபுலர் அகலம்
உள்ளின் உண்ணோய் மிகுமினிப்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்.” (குறுந்.150)
இதுவுமது.
ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும் - நால்வகைப் புணர்ச்சியான்
நிகழுங் களவின்கண்,
|