|
உரைத்துழிக் கூட்டமோடு
எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும்
வந்த கிழவனை மாயஞ் செப்பிப்
பொறுத்த காரணங் குறித்த காலையும்
புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணுங்
குறைந்தவட் படரினு மறைந்தவ ளருகத்
தன்னொடும் அவளொடும் முதன்மூன் றளைஇப்
பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்
நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்
எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும்
புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்
புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும்
ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணுஞ்
செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும்
என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ
அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்
ஆற்றது தீமை யறிவுறு கலக்கமுங்
காப்பின் கடுமை கையற வரினுங்
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக்
காதன் மிகுதி யுளப்படப்பிறவும்
நாடு மூரும் இல்லுங் குடியும்
பிறப்புஞ் சிறப்பும் இறப்ப நோக்கி
அவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ
அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்
ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்
பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்
அவன்விலங் குறினும் களம்பெறக் காட்டினும்
பிறன்வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும்
முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப்
புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்
வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினும்
ஆங்கதன் தன்மையின் வன்புறை யுளப்படப்
பாங்குற வந்த நாலெட்டு வகையுந்
தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன.
இது முறையானே தோழி கூற்று நிகழும் இடம் பலவுந் தொகுத்துக்
கூறுகின்றது.
(இ-ள்.)
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை
மறைப்பும் செலவும் பயில்வும் - தலைவன் பெட்ட வாயில் பெற்று
இரவுவலியுற்று முன்னுறு புணர்ச்சியை உரைப்பின் இன்னது
நிகழுமென்று அறியாது அஞ்சிக் கரந்து மதியுடம்படுப்பத் தோழி
மதியுடம்படுங்கால் அவள் ஆராயும் ஆராய்ச்சி யெல்லாம் நாட்டமாம்;
அஃது எட்டாம். அவற்றுள் முன்னுறு புணர்ச்சியை உணர்த்தற்குக்
காரணம் எழுவகைய, அவை நாற்ற முதலிய ஏழும்:
நாற்றமாவது, ஓதியும் நுதலும் பேதைப் பருவத்துக்குத் தக நாறாது
தலைவன் கூட்டத்தான் மான்மதச்சாந்து முதலியனவும் பல பூக்களும்
விரவி நாறுதல்.
தோற்றமாவது, நீண்டும் பிறழ்ந்தும் பிள்ளைப்பருவத்து வெள்ளை
நோக்கின்றி உள்ளொன்று கொள்ள நோக்குங் கண்ணுந், தந்நிலை
திரிந்து துணைத்து மெல்கிப் பணைத்துக் காட்டுந் தோளும்
முலையுமென்று இன்னோரன்ன.
ஒழுக்கமாவது, பண்ணையாயத்தொடு முற்றிலான் மணற் கொழித்துச்
சோறமைத்தல் முதலியன முனிந்த குறிப்பினளாய்ப் பெண்டன்மைக்கு
ஏற்ப
|