நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2552
Zoom In NormalZoom Out


 

நொதுமலர் தலையே
யேனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த
பகழி யன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்
எறிபொற் பிதிரிற் சிறுபல தாஅய்
வேங்கை வீயுகு மோங்குமலைக் கட்சி
மயிலறி பறியா மன்னோ
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே.”          (நற்.13)

இது     தலைவி   வேறுபாடு  கண்டு  ஆராயுந்  தோழி  தனது
ஆராய்ச்சியை  மறைத்துக்  கூறியது. ‘நாட்டத்தானும்’ என்னும் உம்மை
முற்று,   நாட்ட   மெல்லாந்   தழீஇயினமையின்   ஆனுருபு   இடப்
பொருட்டாம்.  அஃது  இடமாக  வருகின்ற   எட்டனையும் இடத்தியல்
பொருளாக  உரைக்கவே  அவளை நாடுகின்ற காலமும் மேல்வருகின்ற
எட்டனையுந்     தலைவற்கு     உரைக்குங்    காலமும்    ஒருங்கு
நிகழுமென்பதாம்.   இங்ஙனம்   நாடி    மதியுடம்படுக்குந்  துணையுந்
தலைவற்கு இக்குறை முடிப்பல் என்னாது ஒழுகும்.

குறையுறற்கு     எதிரிய  கிழவனை     மறையுறப்   பெருமையிற்
பெயர்ப்பினும் - இரவுவலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய  தலைவனைத்
தோழி   தான்  இவ்  வொழுகலாறு  அறிந்தும்  அறிந்திலள்  போலத்
தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றினும்:

தான்     அறிந்ததனை    மறைத்துக்  கூறுதலன்றி   அன்பின்மை
ஒருதலையாக உடையளல்லள்.

உ-ம்:

“கல்லோங்கு சாரற் கடி புனங் காத்தோம்பு
நல்கூர்ந்தார் மாட்டு நயந்தொழுகித் - தொல்வந்த
வான்றோய் குடிக்கு வடுச்செய்தல் தக்கதோ
தேன்றோய்பூங் கண்ணியீர் நீர்”

“மறுவொடு பட்டன மாமலை நாட
சிறுகுடியோர் செய்வன பேணார் - சிறுகுடிக்கு
மூதான் புறத்திட்ட சூடே போல் நில்லாதே
தாதாடு மார்ப பழி.”

“தகைமான் சிறப்பிற் சான்றோர்க் கொத்த
வகையமை வனப்பினை யாகலின் உலகமொடு
பாற்படற் பாலை மன்னோ காப்புடுத்து
ஓங்குய ரடுக்கத்துச் சார்ந்துவளர் நனந்தலை
நெடுவரை மருங்கிற் குடிமை சான்றோர்
இன்னர் என்னா தின்பம் வெஃகிப்
பின்னிலை முயற்சியின் வருந்தினும்
நும்மோர் அன்னோர்க்குத் தகுவதோ வன்றே.”

என வரும்.

“இவளே, கான னண்ணிய காமர் சிறுகுடி
நீனிறப் பெருங்கடல் கலங்கவுள் புக்கு
மீனெறி பரதவர் மகளே, நீயே
நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க்
கடுந்தோர்ச் செல்வன் காதன் மகனே
நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதுஞ் செலநின் றீமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ வன்றே
யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே.”          (நற்.45)

இதுவும் அது.

உலகு  உரைத்து   ஒழிப்பினும் - அவ்வொழுக்கம் அறியாள் போற்
கரந்த  தோழி  உலகத்தாரைப்போல்  வரைந்து  கொள்ளெனக்  கூறித்
தலைவனை நீக்கினும்:

உ-ம்:

“கோடீ ரெல்வளைக் கொழுமணிக் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயிற்
றெண்கழிச் சேயிறாப் படூஉந்
தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ”  (ஐங்குறு.196)

அருமையின்     அகற்சியும் - அவை கேட்டுப் பிற்றை  ஞான்றும்
வந்தவன்மாட்டுச்  சிறிது  நெஞ்சுநெகிழ்ந்த  தோழி அங்ஙனங் கூறாது
இவள் அரியளெனக் கூறுதலும்:

இருவருமுள்வழி  யவன்வர வுணர்தலின் இருவருள்ளமும் உணர்ந்து
அங்ஙனங் கூறினாள்.

“நெருநலு முன்னா ளெல்லையு மொருசிறைப்
புதுவை யாகலிற் கிளத்த னாணி
நேரிறை வளைத்தோணின் றோழி செய்த
ஆரஞர் வருத்தங் களையா யோவென
வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை
யெம்பதத்