நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2577
Zoom In NormalZoom Out


 

கையற நலியுந்
தண்பனி வடந்தை யச்சிரம்
முந்துவந் தனர்நங் காத லோரே.”          (ஐங்குறு.223)

இது,    வரைவிடைப்    பிரிந்தோன்   குறித்த  பருவத்திற்குமுன்
வருகின்றமை யறிந்த தோழி தலைவிக்குக் கூறியது.              (23)

செவிலி கூற்று நிகழுமாறு கூறல்

115. களவல ராயினுங் காமமெய் படுப்பினும்
அளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங்
கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்
ஆடிய சென்றுழி யழிவுதலை வரினுங்
காதல் கைமிகக் கனவி னரற்றலுந்
தோழியை வினவலுந் தெய்வம் வாழ்த்தலும்
போக்குட னறிந்தபிற் றோழியொடு கெழீஇக்
கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும்
பிரிவின் எச்சத்தும் மகணெஞ்சு வலிப்பினும்
இருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணும்
இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியோடு
அன்னவை பிறவுஞ் செவிலி மேன.

இது,   செவிலிகூற்று   நிகழுமாறு கூறுகின்றது. அக்கூற்றுச் செவிலி
தானே  கூறப்படுவனவுந்,  தலைவியுந்  தோழியுங்  கொண்டு கூற்றாகக்
கூறப்படுவனவுமென   இருவகையவாம்;   இக்கூறப்பட்ட  பதின்மூன்று
கிளவியும்  அவைபோல்வன  பிறவுஞ் செவிலி தானே கூறப்படுவனவுந்
தலைவியுந்  தோழியும்  அவள்  கூற்றாய்க் கொண்டெடுத்து மொழியப்
படுவனவுமாய்ச் செவிலிக் குரியவாமென்றவாறு. ‘இன்னவகை’ யென்றார்,
தன் கூற்றுங் கொண்டு கூற்றுமாய் நிகழுமென்றற்கு.

(இ-ள்.) களவு அலர் ஆயினும்  -  களவொழுக்கம்  புறத்தார்க்குப்
புலனாய் அலர் தூற்றப்படினும்:

உ-ம்:

“பாவடி யுரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப
அழிவ தெவன்கொலிப் பேதையூர்க்கே
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
நல்லியற் பாவை யன்னவென்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.”        (குறுந்.89)

இது செவிலி தானே கூறியது.

“அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்குதிரை வெண்மண லுடைக்குந் துறைவற்
கூறார் பெண்டென மொழிய வென்னை
யதுகேட் டன்னா யென்றன ளன்னை
பைபைய வெம்மை யென்றனென் யானே.”     (ஐங்குறு.113)

இதனுள்,     பெண்டென்றதனைக்   கேட்டு   அன்னாயென்றனள்
அன்னையென  அலர்தூற்றினமை  கண்டு  செவிலி கூறிய கூற்றினைத்
தலைவி கொண்டு கூறியவாறு காண்க.

காமம் மெய்ப்படுப்பினும் - தலைவி  கரந்தொழுகுங்  காமந் தானே
அக்களவினை நன்றாயுந் தீதாயும் மெய்க்கண் வெளிப் படுப்பினும்:

உ-ம்:

“மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
யணியிற் றிகழ்வதொன்றுண்டு.”              (குறள்.1273)

இது, காமத்தான் திகழ்ந்த பொலிவினைச் செவிலி தானே கூறியது.

அளவு மிகத் தோன்றினும் - கண்ணுந்