நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2578
Zoom In NormalZoom Out


 

தோளும்   முலையும்   பிறவும்   புணர்ச்சியாற்  கதிர்த்துக்  காரிகை
நீரவாய் அவளிடத்து அளவை மிகக் காட்டினும்:

உ-ம்:

“கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.”            (குறள்.1272)

இது, கதிர்ப்புக்கண்டு செவிலி தானே கூறியது.

“பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென
ஆகத் தரும்பிய சுணங்கும் வம்புடைக்
கண்ணுருத் தெழுதரு முலையு நோக்கி
யெல்லிவள் பெரிதெனப் பன்மாண் கூறிப்
பெருந்தோ ளடைய முயங்கி நீடுநினைந்
தருங்கடிப் படுத்தனள்...
... ... ... ...
தாரார் மார்பநீ தணந்த ஞான்றே.”           (அகம்.150)

இது, தோழி கொண்டு கூறியது.

தலைப்பெய்து   காணினும்  -  இருவர்க்குங் கூட்டம் நிகழ்தலானே
தலைவனை   இவ்விடத்தே  வரக்  காணினுந்  தலைவியைப்  புறத்துப்
போகக் காணினும்:

பெய்தென்பது காரணகாரியப் பொருட்டாய்ப் பிறவினை கொண்டது.

உ-ம்:

“இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்குல்
அருவி தந்த வணங்குடை நெடுங்கோட்டு
அஞ்சுவரு விடர்முகை யாரிரு ளகற்றிய
மின்னொளி ரெஃகஞ் செந்நெறி விளக்கத்
தனியன் வந்து பனியலை முனியான்
நீரிழி மருங்கி னாரிடத் தமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்ற மசைவளி பகரத்
துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக்
குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரு
மய்ம்மலி யுவகைய னந்நிலை கண்டு
முருகென வுணர்ந்து முகமன் கூறி
யுருவச் செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேட் பரவு மன்னை யன்னோ
என்னா வதுகொ றானே பொன்னென
மலர்ந்த வேங்கை யலங்குசினை பொலிய
மணிநிற மஞ்ஞை யகவும்
அணிமலை நாடனோ டமைந்தநந் தொடர்பே.”  (அகம்.272)

இம்  மணிமிடைபவளத்துத் தலைவனைச் செவிலி கண்டு முருகெனப்
பராவினமை தோழி கொண்டு கூறினாள்.

“உருமுரறு கருவிய” (அகம்.158) என்பதனுள்,

“மிடையூர் பிழியக் கண்டனள் இவளென
அலையல் வாழிவேண் டன்னை”

என்றது,  தலைவி  புறத்துப்போகக்  கண்டு  செவிலி  கூறியதனைத்
தோழி கொண்டு கூறினாள். தானே கூறுவன வந்துழிக் காண்க.

கட்டினும்     கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய  திறத்தாற்
செய்திக்கண்ணும்    -   கட்டுவிச்சியும்   வேலனுந்   தாம்   பார்த்த
கட்டினானுங்  கழங்கினானுந்  தெய்வத்திற்குச்  சிறப்புச்  செய்யாக்கால்
இம்மையல்   தீராதென்று   கூறுதலின்,  அவ்விருவருந்  தம்மினொத்த
திறம்பற்றிய தனையே செய்யுஞ் செய்தியிடத்தும்: