|
யாம் அத்தெய்வத்திற்குப் பலிகொடுத்து மென்றவாறு காண்க:
போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து
நிற்றற்கண்ணும் - உடன்போக்கு அறிந்த பின்னர்ச் செவிலி
தோழியொடு மதியுடம்பட்டு நின்று, தலைவியது கற்புமிகுதியே கருதி
உவந்த உவகைக்கண்ணும்:
அது,
“எம்மணை முந்துறத் தருமோ
தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே” (அகம்.195)
என்றாற்போலக் கற்பினாக்கத்துக் கருத்து நிகழ்தல்.
உ-ம்:
“முயங்குகம் வாராய் தோழி தயங்குபு
கடல்பெயர்ந் தன்ன கானலங் கல்லெனப்
பெயல்கடைக் கொண்ட பெருந்தண் வாடை
வருமுலை வெப்பங் கொழுநற் போற்றிய
சென்றனள் அம்மநின் தோழி யவனோ
டென்றினி வரூஉம் என்றனள்
வலந்துரை தவிர்ந்தன் றலர்ந்த வூரே.”
இது, செவிலி கற்பினாக்கத்து நின்றமை தோழி கூறியது.
பிரிவின் எச்சத்தும் - தலைவி உடன்போயவழித் தான் பின்
செல்லாதே எஞ்சுதலும் உளவாதலின் ஆண்டுக் கூறுவனவும்:
உ-ம்:
“தெறுவ தம்ம நும்மகள் விருப்பே
உறுதுயர் அவலமொ டுயிர்செலச் சாஅய்ப்
பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க
நாடிடை விலங்கிய வெற்பிற்
காடிறந் தனள்நம் காத லோளே.” (ஐங்குறு.313)
இது, பின்செல்லாது வருந்தியிருந்த செவிலியைக் கண்ட நற்றாய்
கூறியது.
இது, நற்றாய் கூற்றாய்ச் ‘செவிலிமேன’ ஆயிற்று.
மகள் நெஞ்சு வலிப்பினும் - உடன்போக்கிற்கு மகள் நெஞ்சு
துணியினும்:
தன்மேல் அன்பு நீங்கியது உணர்ந்து செவிலி கூறும்.
உ-ம்:
“பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனள்
இனியறிந் தேனது துனியா குதலே
கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையுங் காந்தளும் நாறி
யாம்பன் மலரினுந் தான்றண் ணியளே.” (குறுந்.84)
என வரும்.
இருபாற் குடிப்பொருள் இயல்பின்கண்ணும் - தலைவனுந்
தலைவியுந் தோன்றிய இருவகைக் குடியும் நிரம்பி வருதல் இயல்பாகப்
பெற்ற வழியும்:
‘பொருள்’ என்றார் பிறப்பு முதலிய பத்தையுங் (273) கருதி.
“காமர் கடும்புனல்” என்னும் (39) கலியுள்.
“அவனுந்தா, னேன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
தேனி னிறாலெனவேணி யிழைத்திருக்கும்
கானக நாடன் மகன்;................
எனவாங் கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்ப
வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்”
எனத் தோழி தான் கூறிய இருபாற் குடிப்பொருளைக் கூறிச், செவிலி
அறத்தொடு நின்றாளெனக் கொண்டெடுத்து மொழிந்தவாறு காண்க.
|