|
நெய்யணி மயக்கம்பற்றித் தலைவன் கூறியது.
“நெடுநா வொண்மணி கடிமலை இரட்டக்
குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென வொருசார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன்றுறை யூரனும் வந்தனன்
சிறந்தோன பெயரன் பிறந்த மாறே.”
(நற்.40)
இது, முன் வருங்காலத்து வாராது சிறந்தோன் பெயரன் பிறத்தலான்
வந்தானெனத் தோழி கூறினாள்.
“குவளை மேய்ந்த குறுந்தாள் எருமை
குடநிறை தீம்பால் படூஉ மூர
புதல்வனை ஈன்றிவண் நெய்யா டினளே.”
இதுவும் அது.
பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கு என முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் - தலைவி தனது ஆற்றாமை மிகுதியான் தழுவி ஆற்றுதற்குக் குளிர்ந்த பயன் கொடுத்தல் பொருந்திய பல அணைகளைத் தழுவித் தன்னைப் புல்லுதல் பெறாதே வருந்திக் கிடந்த தலைவியை அணுகித் தான் கூடுதலைக் கருதின நிறையழிந்த காலத்தே அவளது மெத்தென்ற சிறிய அடியைத் தீண்டிய இரத்தற்கண்ணும்:
இதனானே மகப்பெறுதற்கு முன்னர் அத்துணை
யாற்றாமை
எய்திற்றலளென்றார். இப்பிரிவு காரணத்தான் தலைவனும் நிறையழிவ
னென்றார்.
“அகன் றுரை யணிபெற”
என்னும் மருதக்கலியுள்,
“என்னைநீ செய்யினும் உணர்ந்தீவார் இல்வழி
முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன்
நிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக்
கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால்.”
(கலி.73)
என இதனுட் சீறடிப் புல்லிய இரவினைத் தலைவி கூறியவாறு காண்க. தலைவன் கூற்று
|