நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2642
Zoom In NormalZoom Out


 

ளியுமோ கூறு.”                           (கலி.88)

எனத்   தலைவி   எம்மேலே  இப்  பொய்ச்சூளான்  வருங்கேடு
வருமென மறுத்தவாறு காண்க.

காமக்   கிழத்தியர்   நலம்   பாராட்டிய   தீமையின்   முடிக்கும்
பொருளின்கண்ணும்   -   நலம்பாராட்டிய  காமக்கிழத்தியர்  தலைவி
தன்னிற்  சிறந்தாராகத்  தன்னான் நலம்பாராட்டப்பட்ட இற்பரத்தையர்
மேல் தீமையுறுவரென முடித்துக்கூறும் பொருளின் கண்ணும்:

உ-ம்:

“மடவ ளம்மநீ இனிக்கொண் டோளே
தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த்
தாதுண் வண்டினும் பலர்நீ
ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே.”          (ஐங்குறு.67)

இதனுள்  இப்பொழுது கிடையாதது கிடைத்தாக வரைந்து கொண்ட
பரத்தை   தன்னோடு   இளமைச்   செவ்வி   ஒவ்வா   என்னையுந்
தன்னோடொப்பித்துத்  தன்  பெரிய  நலத்தாலே மாறுபடுமென்பவென
அவள்  நலத்தைப்  பாராட்டியவாறும்,  நீ பசப்பித்தோர் வண்டு தாது
உண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவாறுங் காண்க.

“அணிற்பல் லன்ன” (குறுந்.49)  என்னும் பாட்டுக்  கற்பாகலின்
இதன்பாற்படும்.

(கொடுமையொழுக்கம்   தோழிக்கு   உரியவை  வடுவறு  சிறப்பிற்
கற்பில்  திரியாமைக்   காய்தலும்   உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
ஆவயின்  வரூஉம்   பல்வேறு   நிலையினும்)   கொடுமை  ஒழுக்கம்
தோழிக்கு உரியவை - பரத்தையிற் பிரிவும் ஏனைப்பிரிவுகளும்  ஆகித்
தலைவன்கண்  நிகழுங்  கொடுமை  யொழுக்கத்தில்  தோழி கூறுதற்கு
உரியளென   மேற்கூறுகின்றவற்றைக்   கேட்டவழி;  வடுவறு  சிறப்பிற்
கற்பில்  திரியாமை  -  எஞ்ஞான்றுங்  குற்றமின்றி  வருகின்ற பிறப்பு
முதலிய   சிறப்பிடத்துங்   கற்பிடத்துங்   திரிவுபடாதபடி;  காய்தலும்
உவத்தலும்  பிரித்தலும்  பெட்டலும்  நிலையினும் - தோழி கூற்றினை
வெகுளலும் மகிழ்தலும் அவளைப் பிரித்தலும்