|
தலைவன் வரவுமலிந்து கூறுவனவும் வந்தபின்னர் முன்பு நிகழ்ந்தன கூறுவனவும், வற்புறுப்பாள் பருவமன்றெனப் படைத்து மொழிவனவுந் தூது கண்டு கூறுவனவுந், தூது விடுவனவுஞ் சேணிடைப் பிரிந்தோன் இடைநிலத்துத் தங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும், நிமித்தங்காட்டிக் கூறுவனவும், உடன் சேறலை மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம்.
“பாஅலஞ்செவி” என்னும் (5) பாலைக்கலியுள்,
“பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
எந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வது
அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே.” (கலி.5)
இதனுட், ‘புரிந்தனை’ யென இறப்பும் ‘இறக்கு’மென எதிரும் மரபில். தப்பாமல் வந்தவாறு காணக்.
“வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவயர்ந் தனையா னீயே நன்றும்
நின்னயந்துறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாடநீ விரைந்துசெய் பொருளே.” (ஐங்குறு.309)
இஃது எதிரது நோக்கிற்று.
“புறவணி நாடன் காதன் மடமகள்
ஒண்ணுதல் பசப்ப நீசெலில் தெண்ணீர்ப்
போதவிழ் தாமரை யன்னநின்
காதலம் புதல்வ னழுமினி முலைக்கே.” (ஐங்குறு.424)
இதுவும் அது.
இனிப் ‘பிற’ வருமாறு:
“பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்காற் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென விசைக்கும்
கடும்பொடு கொள்ளும் அத்தத் தாங்கண்
கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர்
நெடும்பெருங் குன்ற நீந்தி நம்வயின்
வந்தனர் வாழி தோழி
|