|
பருவம் வந்துநின் றதுவே
எம்மின் உணரா ராயினுந் தம்வயின்
பொய்படு கிளவி நாணலும்
எய்யா ராகுதல் நோகோ யானே.” (ஐங்குறு.472)
இது, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது.
தூதுவிட்டது வந்துழிக் காண்க.
“பதுக்கைத்தாய ஒதுக்கருங் கவலைச்
சிறுகண் யானை யுறுபகை நினையாது
யாங்குவந் தனையோ பூந்தார் மார்ப
அருள்புரி நெஞ்சம் உய்த்தர
இருள்பொர நின்ற இரவி னானே.” (ஐங்குறு.362)
இது சேணிடைப்பிரிந்து இரவின்வந்துழிக் கூறியது.
“ஆமா சிலைக்கு மணிவரை ஆரிடை
ஏமாண் சிலையார்க் கினமா இரிந்தோடுந்
தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கூறும்
வாய்மாண்ட பல்லி படும்.” (கைந்நிலை.18)
இது நிமித்தங் காட்டிக் கூறியது.
இன்னும் அதனானே நமர் பொருள்வேண்டுமென்றார் அதற்கு யான் அஞ்சினேனெனக் களவின் நிகழ்ந்ததனைக் கற்பில் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க.
“கன்னவில் தோளான் கடிநாள் விலக்குதற்
கென்னை பொருணினைந்தார் ஏந்திழாய் - பின்னர்
அமரேற்றுக் கொள்ளுமென்றஞ்சினேன் அஞ்சார்
நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.”
இன்னுந் தோழிகூற்றாய்ப் பிறவாற்றான் வருவனவெல்லாம் இதனான் அமைக்க.
“அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பலர்மடி பொழுதி னலமிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃதூரே.” (ஐங்குறு.104)
இது புதல்வற்பெற்றுழித் தலைவன் மனைக்கட்சென்ற செவிலிக்கு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி அவன் ஊர்காட்டிக் கூறியது.
வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என்மனார் புலவர் - தோழி கூற்றாய்த்
|