|
மிதங்கூறலின் இளமைப்பருவத்தாள் கூற்றாயிற்று.
“ஒண்டொடி யாயத் துள்ளுநீ நயந்து
கொண்டனை யென்பவோர் குறுமகள்” (அகம்.96)
எனக் காமஞ்சாலா இளமையோளைக் கூறிற்று.
இரட்டுற மொழிதலென்பதனாற் பரத்தையரிடத்துப் புலப்பட ஒழுகாது அவர் புல்லுதலை மறைத்தொழுகுதலாற் காமக் கிழத்தியர்க்குப் பிறக்கும் புலவிக்கண்ணும் அவர்க்குக் கூற்று நிகழுமெனவும் பொருள் கூறுக.
உ-ம்:
“கண்டேனின் மாயங் களவாதல் பொய்ந்நகா” (கலி.90)
என்னும் மருதக்கலியுட் காண்க.
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் - இல்லிடத்திருந்த தலைவனுந் தலைவியும் ஊடியும் உணர்த்தியுஞ் செய்த தொழிலைக் கேட்டு இகழும் இகழ்ச்சிக்கண்ணும்:
உ-ம்:
“கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.” (குறுந்.8)
“நன்மரங் குழீஇய நனைமுதிர் சாடிப்
பன்னா ளரித்த கோஒய் உடைப்பின்
மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்ப னெல்லின் வேளூர் வாயில்
நறுவிரை தெளித்த நாறிணர் மாலை
பொறிவரி யினவண் டூதல கழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
புனையிருங் கதுப்பி னீகடுத் தோள்வயின்
மனையோள் தேற்றும் மகிழ்ந னாயின்
யார்கொல் வாழி தோழி நெருநை
தார்பூண் களிற்றற் றலைப்புணை தழீஇ
வதுவை யீரணிப் பொலிந்த நம்மொடு
புதுவது வந்த காவிரிக்
கோடுதோய் மலிர்நிறை யாடி யோரே” (அகம்.166)
என வரும்.
இவையும் இளையோர் கூற்று. பிறவும் அன்ன.
பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும் - வெவ்வேறாகிய புதல்வரைத் தாங்கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும்:
‘வேறுபல புதல்வ’ ரென்றார் முறையாற்கொண்ட மனைவியர் பலரும் உளராதலின்,
“ஞாலம் வறந்தீர” என்னும் மருதக்கலியுள்,
“அடக்கமில் போழ்தின்கண்
|