|
ட்கு உரைப்பலென்றலின் நடுங்கினா னென்றது. “கண்டேனின்மாயம்” என்னும் மருதக்கலியுள்.
“ஆராக் கவவின் ஒருத்திவந் தல்கற்றன்
சீரார் ஞெகிழஞ் சிலம்பச் சிவந்துநின்
போரார் கதவ மிதித்த தமையுமோ
ஆயிழை யார்க்கு மொலிகேளா வவ்வெதிர்
தாழா தெழுந்துநீ சென்ற தமையுமோ
மாறாள் சினைஇ யவளாங்கே நின்மார்பின்
நாறிணர்ப் பைந்தார் பரிந்த தமையுமோ
தேறிநீ தீயே னலேனென்று மற்றவள்
சீறடி தோயாஇறுத்த தமையுமோ.” (கலி.90)
எனச், சேரிப் பரத்தையராற் புலந்து தலைவனொடு கூறியவாறு காண்க. இன்னும் இதனானே,
“நீளிரும் பொய்கை யிரைவேட் டெழுந்த
வாளை வெண்போத் துணீஇய நாரைதன்
அடியறி வுறுதல் அஞ்சிப் பைப்பயக்
கடியிலம் புகூஉங் கள்வன் போலச்
சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொ
டாவ தாக இனிநா ணுண்டோ
வருகதி லம்மவெஞ் சேரி சேர
அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்
தாருந் தானையும் பற்றி ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத்
தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன்
மார்புகடி கொள்ளே னாயின் ஆர்வுற்
றிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள்போற்
பரந்து வெளிப்படா தாகி
வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.” (அகம்.276)
இதனுட் பரந்து வெளிப்படாதாகி வருந்துக என்னலம் என்றமையிற் சேரிப்பரத்தையைப் புலந்து கூறுதன் முதலியனவுங் கொள்க. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக. (10)
அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று இவை எனல்
152. கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய.
இது, விருந்து முதலிய
|