நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2678
Zoom In NormalZoom Out


 

வாயில்கள் போலாது அகநகர்க்கட்  புகுதற்குரிய வாயில்கள்  கூற்று
உணர்த்துகின்றது.

(இ-ள்.) கற்பும் - கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத
நல்லொழுக்கமும்;   காமமும்   -  அன்பும்;   நற்பால்  ஒழுக்கமும் -
எவ்வாற்றானுந்  தங்  குலத்திற்கு  ஏற்றவாற்றான் ஒழுகும்  ஒழுக்கமும்;
மெல்   இயற்பொறையும்   -   வல்லென்ற   நெஞ்சொடு  பொறுக்கும்
அவனைப்  போலாது  ஒரு  தலையாக  மெல்லென்ற  நெஞ்சினராய்ப்
பொறுக்கும்  பொறையும்;  நிறையும்  -  மறை புலப்படாமை  நிறுக்கும்
நெஞ்சுடைமையும்;  வல்லிதின்  விருந்து  புறந்தருதலும் -  வறுமையுஞ்
செல்வமுங்  குறியாது வல்லவாற்றான் விருந்தினரைப் பாதுகாத்து அவர்
மனமகிழ்வித்தலும்;   சுற்றம்   ஓம்பலும்  -  கொண்டோன்   புரக்கும்
நண்புடை  மாந்தருஞ்  சுற்றத்தாருங்  குஞ்சர முதலிய  காலேசங்களும்
பலபடை  மாக்களும்  உள்ளிட்ட  சுற்றங்களைப்  பாதுகாத்து   அவை
உண்ட  பின்  உண்டலும்;  அன்னபிறவும்  கிழவோள்   மாண்புகள் -
அவை   போல்வன   பிறவுமாகிய   தலைவியுடைய   மாட்சிமைகளை;
முகம்புகன்   முறைமையிற்   கிழவோற்கு   உரைத்தல்   -    அவன்
முகம்புகுதும்    முறைமை    காரணத்தான்   தலைவற்குக்   கூறுதல்;
அகம்புகன்  மரபின்  வாயில்கட்கு உரிய - அகநகர்க்கட் புகுந்து  பழகி
அறிதன் முறைமையினையுடைய வாயில்களுக்குரிய, என்றவாறு.

அன்னபிறவாவன, அடிசிற்றொழிலுங், குடிநீர்மைக் கேற்ற வகையான்
தலைமகள்    ஒழிந்த   தலைமகளிரையும்   மனமகிழ்    வுறுத்தலுங்,
காமக்கிழத்தியர்   நண்புசெய்து  நன்கு   மதிக்கப்படுதலும் போல்வன.
புகலுதல்  -  மகிழ்தல். செவிலி கூறாமை கொள்க, அவட்கு முகம்புகன்
முறைமையின்மையின்.

உ-ம்:

“கடல்பா டவிந்து தோணி நீங்கி
நெடுநீ ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை