|
பிறரில் சேறல்
நிலைமையில் தீப்பெண்டீர்ச் சார்தல் - கலனணிந்து
வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல்
கோற்றொடியார் கோளழியு மாறு.” (அறிநெறி.94)
இவை அல்லவைகடிதல். இவை அறிவர் கூற்றாதலின் புறப்புறப் பொருளாயிற்றென உணர்ந்துகொள்க. (13)
அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
155. இடித்துவரை நிறுத்தலு மவர தாகுங்
கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின்
இஃது அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
கூறுகின்றது.
(இ-ள்.)
கிழவனுங் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் - தலைவனுந் தலைவியும் அவ்வறிவரது ஏவலைச்செய்து நிற்பராதலின்: இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் - அவரைக் கழறி ஓரெல்லையிலே நிறுத்தலும் அவ்வறிவரது தொழிலாகும் எ-று.
அஃது, உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவிமாட்டு ஊடினானையும் உணர்ப்புவயின் வாராது ஊடினாளையுங் கழறுப.
“உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே யிஃதோ
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கைப்
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே.” (குறுந்.295)
இது, தலைவனைக் கழறியது.
“மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
யெனை மாட்சித் தாயினு மில்.” (குறள்.52)
இது, தலைவியைக் கழறியது. (14)
தலைவற்குப் புலவியு மூடலு நிகழுமிடம் இவை எனல்
156. உணர்ப்புவரை இறப்பினுஞ் செய்குறி பிழைப்பினும்
புலத்தலும் ஊடலுங் கிழவோற் குரிய.
இது, தலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங்
கூறுகின்றது.
(இ-ள்.)
உணர்ப்புவரை இறப்பினும் - கற்பிடத்துத் தலைவி ஊடியவழி அவன் தேற்றத் தேறுமெல்லை இகந்தனளாயினும்; செய்குறி பிழைப்பினும் - களவின்கட் டலைவிசெய்த குறியைத் தானே தப்பினும்; புலத்தலும் ஊடலுங் கிழவோற்கு உரிய - உள்ளஞ் சிறிது வேறுபடுதலும் அவ்வேறுபாடு மிக்கு நீடுநின்று தேற்றியக்கால் அது நீங்குதலுந் தலைவற்குரிய என்
|