|
யெனக் கொண்டு சீற்றங்கொள்ளாது ஒழுகும் மடனென்னுங் குணத்திற்கு ஏற்றன அறிந்தொழுகும் உரிமையுடையளாகிய எண்மையானும்; அன்பிலை கொடியை என்றலும் உரியள்
- தலைவனை அன்பிலை யென்றலுங் கொடியை யென்றலுமுரியள் தோழி எ-று.
கொடுமை கடையாயினார் குணம். களவினுள் தன் வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையுங் கோடலின் இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க.
உ-ம்:
“கண்டவ ரில்லென உலகத்துள் உணராதார்
தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை யாகலின்
வண்பரி நவின்ற வயமான் செல்வ
நன்கதை யறியினு நயனில்லா நாட்டத்தால்
அன்பிலை யெனவந்து கழறுவல் ஐயகேள்;
மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை
முகிழ்செய முள்கிய தொடர்பவ ளுண்கண்
அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய்
இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ;
இலங்கேர் எல்வளை யேர்தழை அல்குல்
நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப்
புலந்தழப் புல்லாது விடுவாய்
இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண்நீ;
எனவாங்கு. அனையளென் றளிமதி பெரும நின்னின்
றிறைவரை நில்லா வளையள் இவட்கினிப்
பிறையேர் சுடர்நுதற் பசலை
மறையச் செல்லும்நீ மணந்தனை விடினே.” (கலி.125)
என்னும் நெய்தற்கலி கைகோள் இரண்டற்குங் கொள்க. (17)
தலைவி தலைவனொடு அயன்மைகூறவும் பெறுவளெனல்
159. அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி
அகன்மலி ஊட லகற்சிக் கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.
இது, தலைவிக்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துகின்றது.
(இ-ள்.)
அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் - தோழி அன்பிலை கொடியையெனக் கேட்ட தலைவன் முனிந்த உள்ளத்தனாங்கொல்லோவென
|