நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2686
Zoom In NormalZoom Out


 

ஐயுற்று  அவனது குறிப்பை அறிதல் வேண்டியும்; அகன்மலி ஊடல்
அகற்சிக்   கண்ணும்   -   தனது   நெஞ்சில்  நிறைந்துநின்ற ஊடல்
கையிகந்து   துனியாகிய  வழி  இஃது  அவற்கு  எவனாங்கொல்லென
அஞ்சிய  வழியும்;  கிழவி  வேற்றுமைக்கிளவி  தோற்றவும்  பெறும் -
தலைவி தலைவனொடு  அயன்மையுடைய சொல்லைத் தோற்றுவிக்கவும்
பெறும் எ-று.

உ-ம்:

“நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும்உரையல் அவர்நமக்
கன்னையும் அத்தனும் அல்லரோ
புலவிய தெவனோ அன்பிலங் கடையே.”        (குறுந்.93)

இதனுள்   அவரை அன்பிலை கொடியையொன்னாதி, அன்பில் வழி
நின்  புலவி  அவரை  என்செய்யும்  அவர்   நமக்கு  இன்றியமையாத
எமரல்லரோவென இருவகையானும் அயன்மை கூறியவாறு காண்க.  (18)

தலைவன் தலைவிகண் பணிந்த கிளவி கூறுமிடமிதுவெனல்

160. காமக் கடப்பினுள் பணிந்த கிளவி
காணுங் காலைக் கிழவேற் குரித்தே
வழிபடு கிழமை யவட்கிய லான.

இது, தலைவி  வேற்றுமைக்கிளவி தோற்றிய  பின்னர்த்  தலைவற்கு
உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.)    காமக் கடப்பினுட் பணிந்த கிளவி - அங்ஙனந் தலைவி
கண்ணுந்   தோழிகண்ணும்  வேறுபாடு  கண்டுழித்  தனக்குக்   காமங்
கையிகந்துழித்   தாழ்ந்துகூறுங்  கூற்று;  காணுங்  காலை  கிழவோற்கு
உரித்தே  -  ஆராயும்  காலத்துத் தலைவற்கு உரித்து; வழிபடு கிழமை
அவட்கு  இயலான  -  அவனை  எஞ்ஞான்றும்   வழிபட்டொழுகுதல்
தலைவிக்கு இல்லறத்தொடு பட்ட இயல்பாகலான் எ-று.

உ-ம்:

“ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா
என்க ணெவனோ தவறு”                      (கலி.88)

“கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று”     (கலி.88)

“நின்னாணை கடக்கிற்பா ரியார்”                (கலி.81)

என்றாற்போல்வன கொள்க.

‘காணுங்காலை’ என்றதனான்  தலைவன்   தலைவியெதிர்  புலப்பது
தன்தவறு சிறிதாகிய இடத்தெனவும், இங்ஙனம் பணிவது தன் தவறு