|
பெரிதாகிய இடத்தெனவுங் கொள்க. (19)
தலைவன்கண் தலைவியும் பணிந்து கூறுமெனல்
161. அருண்முந் துறுத்த அன்புபொதி கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே.
இது, தலைவன் பணிந்து மொழிந்தாங்குத் தலைவியும் பணிந்து கூறுமென்கின்றது.
(இ-ள்.)
அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி - பிறர் அவலங் கண்டு அவலிக்கும்அருள் முன் தோற்றுவித்த அவ்வருள் பிறத்தற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிகழும் அன்பினைக் கரந்து சொல்லுங் கிளவி; பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே - பணிந்தமொழி தோற்றாது வேறொரு பொருள் பயப்பக்கூறுதல் தலைவிக்கும் உரித்து எ-று.
வேறு பொருளாவது தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையுங் கைகடந்து அவன் ஏவலைச் செய்ததென்றாற்போலக் கூறுதலுமாம்.
இது ‘தன்வயிற் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்’
(தொல்.பொ.11) எனப் பொருளியலுள் வழுவமைத்தற்கு இலக்கணம்.
“இணையிரண்டு” என்னும் மருதக்கலியுள்,
“மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல்
வீசேர்ந்து வண்டார்க்குங் கவின்பெறல் வேண்டேன்மன்
நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் எம்மனை
நீசேர்ந்த இல்வினாய் வாராமற் பெறுகற்பின்” (கலி.77)
எனக் கூறிய தலைவி,
“கடைஇய நின்மார்பு தோயலம் என்னும்
இடையு நிறையும் எளிதோநிற் காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னுந் தம்மோ
டுடன்வாழ் பகையுடை யார்க்கு.” (கலி.77)
என்புழி நிற்காணிற் கடவுபு கைத்தங்கா நெஞ்செனவே அவன் ஆற்றாமை கண்டருளி நெஞ்சு ஏவல்செய்தென வேறொரு பொருள் பயப்பக் கூறித் தன் அன்பினைக் கரந்தவாறு காண்க.
“கூன்முண் முள்ளி” (அகம்.26) என்பதனுட் “சிறுபுறங் கவை
|