|
நயந்துநீ துறத்தலிற்
பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே.” (ஐங்குறு.55)
இது, தோழி அலர் கூறியது. (21)
அலராற்றோன்றும் பயனிதுவெனல்
163. அலரில் தோன்றுங் காமத்திற் சிறப்பே.
இஃது அலர் கூறியதனாற் பயன் இஃது என்கின்றது.
(இ-ள்.)
அலரில் தோன்றுங் காமத்திற் சிறப்பே - இருவகைக் கைகோளினும் பிறந்த அலரான் தலைவற்குந் தலைவிக்குங் காமத்திடத்து மிகுதிதோன்றும் எ-று.
என்றது, களவு அலராகியவழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சத்தான் இருவர்க்குங் காமஞ்சிறத்தலுங் கற்பினுட்
பரத்தைமையான் அலர்தோன்றியவழிக் காமஞ்சிறத்தலுந் தலைவன் பிரிவின்
கட்டலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம்.
உ-ம்:
“ஊரவர் கௌவை யெருவாக அன்னசொல்
நீராக நீளுமிந் நோய்” (குறள்.1147)
“நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காம நுதுப்பே மெனல்” (குறள்.1148)
என்றாற்போல்வன கொள்க. (22)
இதுவுமது
164. கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே.
இதுவுங் காமச்சிறப்பே கூறுகின்றது.
(இ-ள்.)
கிழவோன் விளையாட்டு - தலைவன் பரத்தையர் சேரியுள் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டும் அவருடன் யாறு முதலியன ஆடியும் இன்பம் நுகரும் விளையாட்டின் கண்ணும், ஆங்கும் அற்று - அப்பரத்தையரிடத்தும் அலரான் தோன்றுங் காமச் சிறப்பு எ-று.
‘ஆங்கும்’ என்ற உம்மையான் ஈங்கும் அற்றெனக் கொள்க. தம்மொடு தலைவன் ஆடியது பலரறியாதவழி யென்றுமாம். பலரறிந்தவழி அவனது பிரிவு தமக்கு இழிவெனப்படுதலின் அவர் காமச்சிறப்புடையராம். தலைவன் அவரொடு விளையாடி அலர் கேட்குந்தோறுந் தலைவிக்குப் புலத்
|