நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2692
Zoom In NormalZoom Out


 

கட்கு உரியதொரு பகுதி கூறுகின்றது.

(இ-ள்.)     முன்னிலைப்   புறமொழி - முன்னிலையாய் நிற்கின்ற
தலைவனை   நோக்கிப்  பிறரைக்  கூறுமாறுபோலக்  கூறுதல்; எல்லா
வாயிற்கும்  -  பன்னிரண்டு வாயில்களுக்கும்: பின்னிலைத்  தோன்றும்
என்மனார்  புலவர்  -  குறைவேண்டி  முயலுங்கால்  தோன்றுமென்று
கூறுவர் புலவர் எ-று.

உ-ம்:

“உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல்
பண்டுமிவ் வுலகத் தியற்கையஃதின்றும்
புதுவ தன்றே புலனுடை மாந்திர்
தாயுயிர் பெய்த பாவை போல
நலனுடை யார்மொழிக்கண் தாவார்தாந் தந்நலந்
தாதுதேர் பறவையி னருந்திறல் கொடுக்குங்கால்
ஏதிலார் கூறுவ தெவனோநின் பொருள்வேட்கை”  (கலி.22)

எனத் தலைவனை நோக்கி  முன்னிலைப்  புறமொழியாகக்  கூறிற்று.
                                                       (26)

கூத்தர்கிளவி இவையெனல்

168. தொல்லவை யுரைத்தலும் நுகர்ச்சி யேற்றலும்
பல்வாற் றானும் ஊடலின் தணித்தலும்
உறுதி காட்டலும் அறிவுமெய் நிறுத்தலும்
ஏதுவின் உணர்த்தலுந் துணிவு காட்டலும்
அணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன.

இது, கூத்தர்குரிய கிளவி கூறுகின்றது.

(இ-ள்.)     தொல்லவை  உரைத்தலும் - முன்பே மிக்கார் இருவர்
இன்பம்  நுகர்ந்தவாறு இதுவெனக் கூறலும்; நுகர்ச்சி ஏற்றலும் -  நுமது
நுகர்ச்சி  அவரினுஞ் சிறந்ததெனக் கூறலும்; பல் ஆற்றானும்  ஊடலின்
தணித்தலும்  -  இல்லறக்  கிழமைக்கு  இயல்பன்றென்றாயினும்  இஃது
அன்பின்மையா   மென்றாயினுங்  கூறித்  தலைவியை   ஊடலினின்று
மீட்டலும்;  உறுதிகாட்டலும்  - இல்வாழ்க்கை நிகழ்த்தி இன்பநுகர்தலே
நினக்குப் பொருளென்றலும்;

இனிக்    கூறுவன  தலைவற்குரிய:  அறிவு  மெய்  நிறுத்தலும்  -
புறத்தொழுக்கம்மிக்க  தலைவற்கு  நீ கற்றறிந்த அறிவு இனி  மெய்யாக
வேண்டுமென்று  அவனை மெய்யறிவின்கண்ணே நிறுத்தலும்;  ஏதுவின்
உணர்த்தலும்   -   இக்   கழிகாமத்தான்   இழிவு   தலைவருமென்ற
தற்குக்காரணங் கூறலும்; துணிவு