நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2696
Zoom In NormalZoom Out


 

பின் விரைபுநீர் முடுகச்
செல்லு நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர்புக லாய்ந்தே.”          (அகம்.324)

அவைகள் தங்களுக்கு வளராப்பிள்ளை யென்றலுமாம்.

இது பெறுவளென்றது.

ஆற்றது  பண்பும்,  ஆற்றிடைக்   கண்ட  பொருளும் இறைச்சியும்
உடன்போக்கிலுங்  கற்பிலுங்  கூறுவனவாதலின் இச்சூத்திரங் கைகோள்
இரண்டற்கும் பொதுவிதி. (29)

இது இளையோர்க்குரிய இயல்புகூறல்

171. உழைக்குறுந் தொழிலுங் காப்பும் உயர்ந்தோர்க்கு
நடக்கை எல்லாம் அவர்கட் படுமே.

இது   முற்கூறியவற்றிற்கு   உரியார்    இங்ஙனஞ்    சிறந்தாரென
மேலதற்கொரு புறனடை.

(இ-ள்.)  உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்க்கு நடக்கை
எல்லாம்  -  அவரிடத்து  நின்று கூறிய தொழில் செய்தலும்  போற்றீடு
முதலிய பாதுகாவலும் பிறவும் உயர்ந்தோர்க்குச் செய்யுந்  தொழிற்பகுதி
யெல்லாம்;  அவர்கட்  படும்  - முற்கூறிய இளையோரிடத்து உண்டாம்
எ-று.

என  இவ்விரண்டற்குமுரியர் அல்லாத  புறத்தினர்  முற்  கூறியவை
கூறப்பெறாரென்பது பொருளாயிற்று.                          (30)

தலைவன்பரத்தைமை நீங்குமிடமிவை எனல்

172. பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத்
தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும்
இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும்
கிழவோ னிறந்தது நினைஇ யாங்கட்
கலங்கலு முரியன் என்மனார் புலவர்.

இது,     மேல் அதிகாரப்பட்ட வாயில்  பரத்தையிற்   பிரிவொடும்
பட்டாதாகலின்  அதுகூறி  இனித்  தலைவன்  பரத்தைமை நீங்குமிடங்
கூறுகின்றது.

(இ-ள்.)   பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை - மூவைகை
வருணத்தாரும்  முன்னர்த் தத்தம் வருணத்தெய்திய வதுவை   மனைவி
யர்க்குப்    பின்னர்    முறையாற்    செய்துகொள்ளப்பட்ட   பெரிய
பொருளாகிய    வதுவை    மனைவியரை;   தொன்முறை    மனைவி
எதிர்ப்பாடாயினும் - பழைதாகிய முறைமையினையுடைய மனைவி