நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2722
Zoom In NormalZoom Out


 

போலவும்
வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத்
தலையுற முன்னடிப் பணிவான் போலவும்.”     (அகம்.128)

இவற்றுள்,   தன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலு
முடையதாகக்  கூறியவாறும்,  ஆங்கு  எதிர்பெய்துகொண்ட தலைவன்
உருவும்  உறுப்பும்  உணர்வும் மறுத்துரைத்தலு முடையதாகச் செய்யா
மரபின    செய்ததாகக்    கூறியவாறும்,   அவை  உயர்திணையாகக்
கூறியவாறும், பிறவுமுணர்க.

“இன்னகை யினைய மாகவு மென்வயின்
ஊடல் யாங்குவந் தன்றென யாழநின்
கோடந்து புருவமொடு குவவுநுதல் நீவி
நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்”          (அகம்.39)

என வருவனவுங் கொள்க.                                 (3)

கனவு களவின்கட் செவிலிக்கு முரித்தெனல்

198. தாய்க்கும் உரித்தாற் போக்குடன் கிளப்பின்.

இது,   முற்கூறிய   கனவு   களவின்கட்  செவிலிக்கு  முரித்தென
வழுவமைக்கின்றது.

(இ-ள்.)  உடன்போக்குக் கிளப்பின் - உடன்போக்கின்  கட்கூறின்;
தாய்க்கும் உரித்தால் -அக்கனவு செவிலிக்கும் உரித்தாயிருந்தது முந்து
நூற்கண் எ-று.

தோழி உடன்பட்டுப் போக்குதலானும் நற்றாய் “நற்பாற் பட்டனள்”
என்று வருதலானுந் “தாயெனப்படுவோள்  செவிலி  யாகும்” (124)
என்பதனானுஞ்   செவிலியைத்   தாயென்றார்.   தலைவி  போகாமற்
காத்தற்குரியளாதலானும்  அவளை  என்றும்  பிரியாத  பயிற்சியானுஞ்
செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று.

“காய்ந்து  செலற்  கனலி”  (அகம்.55)  என்பதனுட் “கண்படை
பெறன் கனவ” என்றவாறு காண்க.

பக்கச்சொல் தோழி முதலிய நால்வர்க்குமுரித்தெனல்

199. பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே.

இஃது, எய்தாத தெய்துவித்து வழுவமைக்கின்றது.

(இ-ள்.)  பால்கெழு  கிளவி  -  இலக்கணத்திற்   பக்கச்  சொல்;
நால்வர்க்கும்  உரித்து  - தோழியும்  செவிலியும்  நற்றாயும் பாங்கனு
மென்னும் நால்வர்க்கும் உரித்தாம் எ-று.

மேல்  ‘இருவர்க்கு   முரிய   பாற்கிளவி’    (196)  என்றலின்
தலைவனையுந் தலைவியையும்   ஆண்டே  கூறலின் ஈண்டு  இந்நால்
வருமென்றே கொள்க.