|
று ஏனையவற்றிற்குங் கொள்க.
“புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயிறுற்றனவும் ஒள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியும் நல்லார்
சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந்
தவறாதல் சாலாவோ கூறு”
(கலி.88)
எனவும்,
“குதிரையோ வீறியது”
(கலி.96)
எனவும் வருவனவும் பிறவும்
இழிந்தோர் கூற்றை உயர்ந்தோர் கூறுவன; அவையும் அமைத்துக் கொள்க.
17
இது களவொழுக்கத்தின்கண் தேர் முதலியவற்றை ஊர்ந்துந்
தலைவன் செல்லுவன் எனல்
212. தேரும் யானையும் குதிரையும்
பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப.
இது, களவொழுக்கத்துக்கு மறுதலையாயதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்) தேர்
முதலியவற்றையும் பிற ஊர்திகளையும் ஏறிச்சென்று கூடுதலையும் உரியர் தலைவரென்று கூறுவர் புலவர் எ-று.
‘பிற’வாவன கோவேறுகழுதையுஞ் சிவிகையும்
முதலியனவாம். இது செல்வக் குறைபாடின்மை கூறுதலான் அமைந்தது.
“குறியின்றிப் பன்னாள்நின் கடுந்திண்டேர் வருபதங்கண்
டெறிதிரை யிமிழ்கானல் எதிர்கொண்டா ளென்பதோ
அறிவஞ ருழந்தேங்கி யாய்நலம் வறிதாகச்
செறிவளை தோளுர இவளைநீ துறந்ததை”
(கலி.127)
“நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே” (அகம்.20)
எனவும்,
“கடுமான் பரிய கதழ்பரி கடைஇ
நடுநாள் வரூஉம்”
(நற்.149)
எனவும்,
“கழிச்சுறா வெறிந்த புண்தாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ”
(அகம்.120)
எனவும் வரும்.
ஏனைய வந்துழிக் காண்க.
உம்மையான், இளையரொடு வந்து தனித்துக் கூடுதலுங் கொள்க.
“வல்வில் இளையரோ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ”
(அகம்.120)
என்றாற்போல்வன கொள்க.
இதனானே உடன்போக்கிலும்,
“கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறி
கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய
வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக்
கூறுமின் வாழியோ ஆறுசென் மாக்கள்
நற்றோள் நயந்துபா ராட்டி
எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே”
(ஐங்குறு.385)
எனத் தேர் முதலிய ஏறிப்போதலுங் கொள்க.
(18)
இது ஒரு சொல்வழுவமைத்தல்
213. உண்டற் குரிய அல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே.
இது, சொல்வேறுபட்டுப் பொருளுணர்த்தும் வழுவமைக்கின்றது.
(இ-ள்.) உண்டற்கு உரிய அல்லாப் பொருளை - உண்டற்றொழிலை நிகழ்த்துதற்குரிய அல்லாத பொருளை; உண்டன போலக் கூறலும் மரபே - அத்தொழிலை நிகழ்த்தினவாகப் புலனெறிவழக்கஞ் செய்தலும் மரபு எ-று.
அது,
|