நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2748
Zoom In NormalZoom Out


 

ஆராயுங் காலை இருவர்க்குமுரிய எ-று.

உ-ம்:

“வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத்
தலையுற முன்னடிப் பணிவான் போலவும்
கோதை கோலா விறைஞ்சி நின்ற
ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்.” (கலி.128)

இது,  முன்னே  தலைவி  மனத்து  நிகழ்தலுண்மையிற்  கனவிலுங்
கண்டாளென்றுணர்க.

“தப்பினேன் என்றடி சேர்தலும் உண்டு.”         (கலி.89)

என்பதும் அது.

‘நினையுங்காலை’    யென்றதனான்   தோழியுயர்வுங்   கிழவோன்
பணிமொழி பயிற்றலுங் கொள்க.

“ஒன்று, இரப்பான்போல் எளிவந்துஞ் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்
வல்லாரை வழிபட் டொன்றறிந்த தான்போல்
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்
இல்லோர் புன்கண் ஈகையில் தணிக்க
வல்லான் போல்வதோர் வண்மையு முடையன்
அன்னான் ஒருவன் தன் ஆண்டகை விட்டென்னைச்
சொல்லுஞ்சொல் கேட்டீ சுடரிழாய் பன்மாணும்.”  (கலி.47)

இதனுள்     தலைவன் இரந்துரைத்தவாறுந் தான் அதனை ஏற்றுக்
கொண்டவாறுங்  காண்க.  இச்சூத்திரம் புலவிக்கே கூறினார். ஊடற்குந்
துனிக்குங் ‘காமக்கடப்பின்’(தொல்.பொ.160) என்பதனுட் கூறினாரென
வுணர்க.                                                (33)

கற்புக்காலத்து வேட்கைமிகுதியான் தலைவனுந் தலைவியும்
ஒருவரை ஒருவர் புகழ்வர் எனல்

228. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற்
புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே.

இது,  கற்புக்காலத்துத்  தலைவற்குந்  தலைவிக்கும்   உரியதொரு
வழுவமைக்கின்றது:

(இ-ள்.)     கற்பினுள் - கற்புக்காலத்து; தகைநிகழ் மருங்கின் -
ஒருவர்க்கொருவர்  காதல்  மனத்து  நிகழுமிடத்து; வேட்கை மிகுதியிற்
புகழ்    தகை    வரையார்   -   வேட்கைமிகுதியானே   அதனைப்
புகழ்ந்துரைக்குத்   தகைமையினை  ஆசிரியர்  இருவருக்கும்  நீக்கார்
கொள்வர் எ-று.

“ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்
மாசில் கற்பின் புதல்வன் தாயென
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி.”        (அகம்.6)

இது, புலவிக்கண் தலைவன் புகழ்ந்தது.

“அணைமருள் இன்துயில் அம்பணைத் தடமென்றோள்
துணைமலர் எழில்நீலத் தேந்தெழின் மலருண்கண்
மணமௌவல் முகையன்ன மாவீழ்வான் நிரைவெண்பல்
மணநாறும் நறுநுதன் மாரிவீழ் இருங்கூந்தல்
அலர்முலை ஆகத்து அகன்ற அல்குல்
சிலநிரை வால்வளைச் செய்யா யோவெனப்
பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி
இனிய சொல்லி யின்னாங்குப் பெயர்ப்ப
தினியறிந் தேனது துனியா குதலே.”             (கலி.14)

இது போக்கின்கண் தலைவன் புகழ்ந்தது.

“அரிபெய் சிலம்பின்”                       (அகம்.6)

என்பதனுள் “ஏந்தெழில்  ஆகத்துப்   பூந்தார்  குழைய”  என்பது
தலைவி புலவிக்கட் புகழ்ந்தது.

“நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு”     (அக்.66)

என்பதும் அது.

‘தகை’ எனப் பொதுவாகக் கூறலிற் குணத்தைக் கூறலுங்