இது தும்பைத்திணை
அகத்திணையுள் இன்னதற்குப் புறனாமென்கின்றது. இதுவும் மைந்து பொருளாகப் பொருதலின் மண்ணிடையீடாகப் பொரும் வஞ்சிக்கும் மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும்பிற் கூறினார். (இ-ள்.)
தும்பைதானே நெய்தலது புறனே - தும்பை யென்னும் புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாகும் எ-று தும்பை
யென்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர். நெய்தற்குரிய பெருமணலுலகம் போலக் காடும் மலையுங் கழனியு மல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும் பொழுது வரைவின்மையானும், எற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமுந் தலைமகட்கே பெரும்பான்மை உளதாயவாறு போலக் கணவனை இழந்தார்க்கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக்குறிப்பின் அருள்பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குப வாகலானும், ஒருவரும் ஒழியாமற் பட்டுழிக் கண்டோர் இரங்குப வாகலானும் பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று.
(14) தும்பைத்திணையது பொது
இலக்கணம்
|