டைஇத் தமியராய் நின்று கடுங்களிறு காணிரோ வென்றீர் - கொடுங்குழையார் யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத் தேனற் கிளிகடிகு வார்.” “வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பில் வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேஞ் சோர்ந்த குருதி யொழுகமற் றிப்புறம் போந்ததில் ஐய களிறு.”
(திணை.ஐம்.8) இவை தலைவனைப் பேதைமை ஊட்டின. “நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி - எறிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு.”
(திணை.நூற்.24) இது தலைவியைப் பேதைமை யூட்டியது. “இளையள் விளைவிலள்” என்பதூஉம் இதன்கண் அடங்கும். “புன்றலை மந்திக் கல்லா வன்புறழ் குன்றுழை நண்ணிய முன்றிற் போகாது எரியகைந் தன்ன வீததை யிணர வேங்கையம் படுசிலைப் பொருந்திக் கைய தேம்பெய் தீம்பால் வௌவலிற் கொடிச்சி எழுதெழில் சிதைய அழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயின் மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயலுறு நீலம் போன்றன விரலே பாஅ யவ்வயி றலைத்தலின் ஆனா தாடுமழை தவழுங் கோடுயர் பொதியின் ஓங்கிருஞ் சிலம்பிற் பூத்த காத்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே”
(நற்.379) என வரும். முன்னுறு புணர்ச்சி முறைநிறுத்து உரைத்தலும் - அங்ஙனம் பேதைமை யூட்டியவழி இவள் இக்குறை முடிப்பளென்று இரந்து ஒழுகினேற்கு இவள் புணர்ச்சி யறிந்திலள் போற் கூறினாளென ஆற்றானாயவனை யான் அப்புணர்ச்சி நிகழ்ந்தமை அறிவலென்று கூறி வருத்தந் தீர்த்தலும். உ-ம்: “நறுந்தண் கூந்தற் குறுந்தொடி மடந்தை சிறுமுதுக்குறைவி யாயினள் பெரிதென நின்னெதிர் கிளத்தலு மஞ்சுவல் எனக்கே நின்னுயிர் அன்னள் ஆயினுந் தன்னுறு விழுமங் கரத்த லானே.” நின்னெதிர் கிளத்தல் அஞ்சுவல்
நீ அவட்கு உரைத்தியெனக் கருதியென்றலிற் புணர்ச்சி யுணர்ந்தமை கூறினாள். அஞ்சி அச்சு உறுத்தலும் - அங்ஙனம் ஆற்றுவித்துங் கடிது குறை முடியாமையைக் கருதுந் தோழி குரவரைத் தான் அஞ்சித் தலைவியும் அவரை அஞ்சுவளெனக் கூறுலும்: அஞ்சுதல் அச்சென்றாயிற்று. இவ்வச்சங் கூறவே அவன் ஆற்றும். உ-ம்: “யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற் கரும்பு மருண்முதல பைந்தாட் செந்தினை மடப்பிடித் தடக்கை
|