நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3577
Zoom In NormalZoom Out


ஞ்சான்ற   பொருளை   வழுவமைத்துக்   கொள்ளாது  குற்றமென்றே
கருதிக் கடிதலாம்.

“பொய்யற்ற கேள்வியால் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தால்”
                       (கலி.15)

என்றவழி  ‘மையற்ற  படிவம்’  எனத் தலைவன் கூறியதனைத் தோழி
கூறியவாறு காண்க.

அழியல்   அஞ்சல்  என்று  ஆஇரு பொருளினும் - வந்த குற்றம்
நினக்கு   உளதென்று  அழியலெனவும்   எனக்குள  தென்று  அஞ்ச
லெனவுஞ் சொல்லப்படும் அவ்விருபொருண்மைக் கண்ணும்:

இவை   இரண்டாகக் கொள்ளின் முப்பத்துநான்காமாதலின் இருவர்
குற்றமுங்   குற்றமென   ஒன்றாக்கியது.   தெய்வத்தினாதலின்  ஏதம்
பயவாதென்றான்.

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.”
       (குறுந்.40)

இது  நம்மானன்றி நெஞ்சந் தம்மில் தாங் கலத்தலின் தெய்வத்தான்
ஆயிற்றெனத் தெருட்டியது.

தான் அவட் பிழைத்த பருவத்தானும் - அங்ஙனந் தெய்வத்தினான்
ஆயிற்றேனுங்  குற்றமேயன்றோ  என  உட்கொண்ட  அவட்கு யான்
காதன்    மிகுதியாற்   புணர்ச்சிவேண்ட   என்  குறிப்பிற்   கேற்ப
ஒழுகினையாகலின்   நினக்கொரு  குற்றமின்றென்று  தான்  பிழைத்த
பருவமுணர்த்தும் இடத்தும்: கூற்று நிகழும்.

உ-ம்:

“நகைநீ கேளாய் தோழி தகைபெற
நன்னாட் படராத் தொன்னிலை முயக்கமொடு
நாணிழுக் குற்றமை யறிகுநர் போல
நாங்கண் டனையநங் கேள்வர்
தாங்கண் டனைய நாமென் றோரே.”

இதனுள் நன்னாள் வேண்டுமென்னாது   கூடிய கூட்டத்துள் தங்கி
நாணுச்  சுருங்கி  வேட்கை பெருகிய நம்மினும் ஆற்றாராயினார்போல
நாங்    குறித்துழி    வந்தொழுகிய    தலைவர்   தாங்குறித்தனவே
செய்தனமென   நமக்குத்   தவறின்மை  கூறினாரெனத்  தோழிக்குத்
தலைவி கூறியவழித் தலைவன் தன் பிழைப்புக் கூறியவாறு காண்க.