நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3615
Zoom In NormalZoom Out


கொண்ட    காரியத்திற்கு    முடித்தலாற்றான்கொலென்று   அஞ்சும்
அச்சமாம் எ-று.

எனவே,     அருத்தாபத்தியாற் புணர்ந்து உடன் போகாத தலைவி
மனைக்கணிருந்து  தலைவன்  கூறக்கேட்டு அக்கருப்பொருள்கள் தம்
மேல்  அன்புறுதக்க வினைகளைக் கூறுதல் தலைவன் செய்வினைக்கு
அச்சமாகாது வருவரெனத் துணிந்து கூறுதலாமென்றாராயிற்று.

“கான யானை தோல்நயந் துண்ட
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்க லுலவை யேறி யொய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
கொல்லே மென்ற தப்பல்
சொல்லே தகறல் வல்லு வோரே.”
           (குறுந்.79)

புலம்புதரு குரலவாய்ப் புறவினைப் பெடை  அழைக்கும் வருத்தங்
கண்டு வினைமுடியாமல் வருவரோவென அஞ்சியவாறு காண்க.

“அரிதாய  வறனெய்தி”  என்னும் (11) கலிப்பாட்டுத்  தலைவன்
அன்புறுதக்கன  கூறக்கேட்ட  தலைவி  அவற்றைக் கூறிப் புனைநலம்
வாட்டுநர்  அல்லரென  வரவு  கருதிக்  கூறியவாறு  காண்க. இதனுள்
ஆற்றுவிக்குந்  தோழி  வருவர் கொல்லென ஐயுற்றுக் கூறலின்மையின்
தோழி கூற்றன்மையும் உணர்க.

“புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன” (கலி.3) என்றாற்
போல்வன   தலைவி  கூற்றாய்  வருவன  உளவாயின்  இதன்  கண்
அடக்குக.                                               (7)

தோழி முதலிய வாயில்கட்கு எய்தாததெய் துவித்தல்
 

149.தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினும்
ஆவயின் நிகழு மென்மனார் புலவர்.
 

இது தோழி வாயில்கட்கு எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.)     தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் - தலைவனது
செலவுக்  குறிப்பு  அறிந்து அவனைச் செலவழுங்குவித்தற்குத்  தோழி
யுள்ளிட்ட  வாயில்களைத்  தலைவி  போகவிட்ட  அக்காலத்து அவர்
மேலன  போலக்  கூறும் கூற்றுக்களும்; ஆவயின் நிகழும்  என்மனார்
புலவர்   -   தலைவி  அஞ்சினாற்போல   அவ்வச்சத்தின்  கண்ணே
நிகழுமென்று கூறுவர் புலவர்