நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3626
Zoom In NormalZoom Out


டன்  நிகழ்த்திய  வழியும்;  சொலத்தகு  கிளவி  தோழிக்கு  உரிய -
சொல்லத்தகும் பணிமொழி தோழிக்கு உரிய எ-று.

எனவே, தலைவி குறிப்பறிந்து தோழி கூறுதலன்றித் தலைவி தானே
கூறப்பெறாளென்றவாறு.  எனவே  பாடாண்டிணைக் கைக்கிளையாயின்
தலைவி கூறவும் பெறுமென்று கெள்க. உம்மை சிறப்பும்மை.

உ-ம்:

“தாயுயிர் வேண்டாக் கூருகி ரலவன்
நரிதின்று பரிக்கும் ஊர யாவதும்
அன்புமுதல் உறுத்த காதல்
இன்றெவன் பெற்றனை பைந்தொடி திறத்தே.”

“அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்”
              (குறள்.1303)

என வரும்.

இவை கற்பில் தலைவி குறிப்பினான் தோழிகூற்று வந்தன.

“புலந்தாயு நீயாயிற் பொய்யானே வெல்குவை”

என்று களவில் தோழி கூறினாள், தலைவி குறிப்பினால்.

“கனைபெயல் நடுநாள்யான் கண்மாறக் குறிபெறாஅன்
புனையிழாய் என்பழி நினக்குரைக்குந் தானென்ப
துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின்தன்
அளிநசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யானாக”
    (கலி.46)

எனத்  தோழி  சொல்லெடுப்பதற்குத் தலைவி சிறுபான்மை கூறுதலும்
ஈண்டு ‘உரிய’வென்பதனாற் கொள்க.

“யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின்
தானூட யானுணர்த்தத் தானுணரான் - தேனூறுங்
கொய்தார் வழுதிக் குளிர்சாந்த தணியகலம்
எய்தா திராக்கழிந்த வாறு.”
            (முத்தொள்.104)

இதனுள்  யானுணர்த்தத்   தானுணரானெனப்    பாடாண்திணைக்
கைக்கிளையுள் தலைவி கூறியது காண்க.                      (16)

தோழி இடித்துக்கூறற்கு முரியளெனல்
 

158.பரத்தைமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி
மடத்தகு கிழமை உடைமை யானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியள்.
 

இது,   சொல்லத்தகுங்   கிளவியேயன்றிச்  சொல்லத்தகாக்  கிளவியுந்
தோழி கூறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துகின்றது.

(இ-ள்.)     பரத்தைமை  மறுத்தல் வேண்டியும் - தலைவன் படிற்
றுள்ளத்தாற்  புறத்து ஒழுகும்  ஒழுக்கத்தைப்  போக்குதல் விரும்பியும்;
கிழத்தி   மடத்தகு   கிழமை   உடைமையானும்  -  தலைவி  அவன்
பரத்தைமை அறிந்தேயும் அவன்  கூறியவற்றை  மெய்யெனக் கொண்டு
சீற்றங்கொள்ளாது ஒழுகும் மடனென்னுங் குணத்திற்கு ஏற்றன