நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3628
Zoom In NormalZoom Out


கொடியையொன்னாதி,     அன்பில்  வழி  நின்    புலவி   அவரை
என்செய்யும்   அவர்   நமக்கு   இன்றியமையாத  எமரல்லரோவென
இருவகையானும் அயன்மை கூறியவாறு காண்க.                 (18)

தலைவன் தலைவிகண் பணிந்த கிளவி கூறுமிடமிதுவெனல்
 

160.காமக் கடப்பினுள் பணிந்த கிளவி
காணுங் காலைக் கிழவேற் குரித்தே
வழிபடு கிழமை யவட்கிய லான.
 

இது, தலைவி வேற்றுமைக்கிளவி தோற்றிய  பின்னர்த்  தலைவற்கு
உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.)    காமக் கடப்பினுட் பணிந்த கிளவி - அங்ஙனந் தலைவி
கண்ணுந்   தோழிகண்ணும்  வேறுபாடு  கண்டுழித்  தனக்குக்  காமங்
கையிகந்துழித்  தாழ்ந்துகூறுங்  கூற்று;  காணுங்  காலை  கிழவோற்கு
உரித்தே  -  ஆராயும் காலத்துத் தலைவற்கு உரித்து; வழிபடு கிழமை
அவட்கு  இயலான  -  அவனை  எஞ்ஞான்றும்  வழிபட்டொழுகுதல்
தலைவிக்கு இல்லறத்தொடு பட்ட இயல்பாகலான் எ-று.

உ-ம்:

“ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா
என்க ணெவனோ தவறு”
                    (கலி.88)

“கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று”    (கலி.88)

“நின்னாணை கடக்கிற்பா ரியார்”               (கலி.81)

என்றாற்போல்வன கொள்க.

‘காணுங்காலை’   என்றதனான் தலைவன் தலைவியெதிர் புலப்பது
தன்தவறு  சிறிதாகிய  இடத்தெனவும், இங்ஙனம் பணிவது தன் தவறு
பெரிதாகிய இடத்தெனவுங் கொள்க.                         (19)

தலைவன்கண் தலைவியும் பணிந்து கூறுமெனல்
 

161.அருண்முந் துறுத்த அன்புபொதி கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே.
 

இது, தலைவன் பணிந்து  மொழிந்தாங்குத்  தலைவியும்  பணிந்து
கூறுமென்கின்றது.

(இ-ள்.)  அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி - பிறர் அவலங்
கண்டு  அவலிக்கும்அருள்  முன் தோற்றுவித்த அவ்வருள் பிறத்தற்கு
ஏதுவாகி   எஞ்ஞான்றும்   அகத்து   நிகழும்  அன்பினைக்  கரந்து
சொல்லுங்  கிளவி;  பொருள்பட  மொழிதல் கிழவோட்கும் உரித்தே -
பணிந்தமொழி   தோற்றாது   வேறொரு   பொருள்  பயப்பக்கூறுதல்
தலைவிக்கும் உரித்து எ-று.

வேறு பொருளாவது  தலைவன்   கூறியாங்குத்  தானும்  பணிந்து
கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையுங் கைகடந்து