நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3641
Zoom In NormalZoom Out


வன பிறவும்; பார்ப்பார்க்கு உரிய - அந்தணர்க்கு உரிய எ-று.

‘தேர்நிலை’     யென்றதனான்  தேர்ந்து  பின்னும்   கலங்கினுங்
கலங்காமல்   தெளிவுநிலை   காட்டலுங்   கொள்க.  ‘அன்னபிறவும்’
என்றதனான்.   அறிவர்   இடித்துக்   கூறியாங்குத்தாமும்  இடித்துக்
கூறுவனவும்,    வாயிலாகச்    சென்று   கூறுவனவுந்,   தூதுசென்று
கூறுவனவுங் கொள்க.  ‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின்
மொழியா ததனை முட்டின்று  முடித்தல்’   (666)
    என்பதனாற்
களவியலிற் கூறாதனவும்   ஈண்டே கூறினார்.  அஃது    இப்பேரறிவு
உடையையாயின் இனையை யாகற்பாலை  யல்லையெனக்   காமநிலை
யுரைத்தலுங் கற்பினுள் “இல்லிருந்து  மகிழ்வோற்  கில்லையாற்  புகழே”
எனத் தலைவன் நினையுமாற்றாற் காமநிலை யுரைத்தலும்  அடங்கிற்று.
ஏனையவற்றிற்கும்  இருவகைக்  கைகோளிற்கும்  ஏற்பன கொணர்ந்து
ஒட்டுக.  ‘பார்ப்பான்  பாங்கன்’ என உடன் கூறினமையிற் பாங்கற்கும்
ஏற்பனவுங்     கொள்க.     இவையெல்லாந்    தலைச்சங்கத்தாரும்
இடைச்சங்கத்தாருஞ்செய்த  பாடலுட்  பயின்றபோலும்.  இக்காலத்தில்
இலக்கியமின்று.     பாங்கன்    கூறுவன    ‘நோய்மருங்    கறிநரு’
ளடக்கிக்கொண்டு எடுத்து, மொழியப்படுதலன்றிக் (503) கூற்று அவண்
இன்மை உணர்க. அது,

“வேட்டோர் திறத்து விரும்பியநின் பாகனும்
நீட்டித்தா யென்று கடாங்கடுந் திண்டேர்
பூட்டு விடாஅ நிறுத்து”
                     (கலி.66)

எனவும் வரும்.

இன்னும் சான்றோர் கூறிய செய்யுட்களில்  இதுபோல  வருவன பிற
அனைத்தும் உய்த்துணர்ந்து கொள்க.                         (36)

வாயில்கட்குரியதோர் இலக்கணங் கூறல்
 

178. எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப.
 

இது, வாயில்களின் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) எல்லாவாயிலும் - பார்ப்பான் முதலிய வாயில்களெல்லாம்;
இருவர்  தேஎத்தும்  புல்லிய  - தலைவன் கண்ணுந் தலைவிகண்ணும்
பொருந்திய; மகிழ்ச்சிப் பொருள என்ப - மனமகிழ்ச்சிப் பொருளினை
நிகழ்த்துதலைத் தமக்குப் பொருளாக வுடைய எ-று.

எனவே,     மகிழ்ச்சி கூறப்பெறாவாயிற்று. ‘புல்லிய’ என்றதனானே
விருந்தும்  புதல்வரும்   ஆற்றாமையும்  வாயிலாகுப  என்று கொள்க.
வாயில்கள்  “தோழி  தாயே” (தொல்.பொருள்.193) என்பதனுட்  கூறுப.
உதாரணம் வந்துழிக் காண்க.                               (37)

வாயில்கட்கு எய்தியதிகந்து படாமற் காத்தல்
 

179. அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின்
சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர்.
 

இது, மகிழ்ச்சிப் பொருளன்றி வாயில்கள் இவ்வாறுங்கூறப் பெறுவர்