இது, வருத்தமிக்கவழி இவையுமா மென்கிறது. (இ-ள்.) வண்ணம் பசந்து புலம்பு உறுகாலை - மேனி பசந்து தனிப்படருறுங் காலத்து ; கிழவி உறுப்பினை உணர்ந்த போல - தலைவி தனது உறுப்பினை அறிந்தனபோல ; புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே - பொருந்தின கூற்றாற் சொல்லவும் பெறும் எ-று. “கேளல னமக்கவன் குறுகன்மி னெனமற்றெந் தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம்” (கலி.68) “நாணில மன்றவெங் கண்ண நாணேர்பு ....................பிரிந்திசினோர்க் கழலே.”
(குறுந்.35) “தணந்தநாள் சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்”
(குறள்.1233) என வரும். காதும்
ஓதியும் முதலியன கூறப்பெறா ; கண்ணுந் தோளும் முலையும் போல்வன புணர்க்கப்படுமென்றற்குப் ‘புணர்ந்தவகை’ யென்றார். இதனானே இவற்றைத் தலைவன்பாற் செலவுவர வுடையன போலக் கூறலுங்கொள்க. “கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று”
(குறள்.1244) எனக் கண்ணினைச் செல்வனவாகக் கூறினாள்.
(8) தலைவனொடு வேறுபட்டவழித் தலைவி இவ்வாறு கூறுவள் எனல் |