றல்; கூறுதல் உசாதல் - தலைவியுந் தோழியும் வெறி யாட்டிடத்தும் பிறவிடத்துஞ் சில கூறுதற்கண்ணே தாமும் பிறருடனேயும் உசாவுதல்; ஏதீடு - ஒருவன் களிறும் புலியும் நாயும் போல்வன காத்து எம்மைக் கைக்கொண்டானெனவும் பூத்தந்தான் தழைதந்தானெனவும் இவை முதலிய காரணமிட்டுணர்த்தல்; தலைப்பாடு
- இருவருந் தாமே எதிர்ப்பட்டார் யான் அறிந்திலே னெனக் கூறுதல்; உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ - என்று அவ்வாறனையும் படைத்துமொழியாது பட்டாங்கு கூறுதலென்னுங் கிளவியோடே கூட்டி; அவ் எழுவகைய என்மனார் புலவர் - அத்தன்மைத்தாகிய ஏழு கூற்றை யுடைய அறத்தொடு நிற்றலென்று கூறுவர் புலவர் எ-று. ‘அவ்வெழுவகைய’
என்றதனான் உண்மை செப்புங்கால் ஏனையாறு பொருளினுட் சில உடன்கூறி உண்மைசெப்பலும் ஏனைய கூறுங்காலுந் தனித்தனி கூறாது இரண்டு மூன்றும் உடனே கூறுதலுங் கொள்க. உ-ம்: “எல்லும் எல்லின் றசைவுபெரிதுடையேன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டு யானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ எனமொழிந் தனனே யொருவன்”
(அகம்.110) என்பது எளித்தல். “பகன்மா யந்திப் படுசுட ரமையத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி என்றனள்’’
(அகம்.48) என்பது ஏத்தல். “பூணாக முறத்தழீஇப் போதந்தான்.”
(கலி.39) என்பது வேட்கையுரைத்தல். “முருகயர்ந்து வந்த முதுவாய் வேல சினவ லோம்புமதி வினவுத லுடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய விண்டோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.”
(குறுந்.362) இது வேலனொடு கூறுதலுசாதல். கூறுதற்கண் உசாதலென விரிக்க. “வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுத்த தல்லது - கோடா எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து.”
(திணை.நூற்.15) இதுவும் உசாதலாய் அடங்கும். “உரவுச் சினஞ்செருக்கித் துன்னுதொறும் வெகுளும் முளைவாள் எயிற்ற வள்ளுகிர் ஞமலி திளையாக் கண்ண வளைகுபு நெரிதர நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியாம் இடும்பைகூர் மனத்தேம் மருண்டு புலம்படர மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத்து ஆகாண் விடையின் அணிபெற வந்தெம் அலமர லாயிடை வெரூஉதல் அஞ்சி மெல்லிய இனிய மேவரக் கிளந்தெம் ஐம்பால் ஆய்கவின் ஏத்தி யொண்தொடி அசைமெ
|