இது, களவொழுக்கத்துக்கு மறுதலையாயதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்)
தேர் முதலியவற்றையும் பிற ஊர்திகளையும் ஏறிச்சென்று கூடுதலையும் உரியர் தலைவரென்று கூறுவர் புலவர் எ-று. ‘பிற’வாவன
கோவேறுகழுதையுஞ் சிவிகையும் முதலியனவாம். இது செல்வக் குறைபாடின்மை கூறுதலான் அமைந்தது. “குறியின்றிப் பன்னாள்நின் கடுந்திண்டேர் வருபதங்கண் டெறிதிரை யிமிழ்கானல் எதிர்கொண்டா ளென்பதோ அறிவஞ ருழந்தேங்கி யாய்நலம் வறிதாகச் செறிவளை தோளுர இவளைநீ துறந்ததை”
(கலி.127) “நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே” (அகம்.20) எனவும், “கடுமான் பரிய கதழ்பரி கடைஇ நடுநாள் வரூஉம்”
(நற்.149) எனவும், “கழிச்சுறா வெறிந்த புண்தாள் அத்திரி நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ”
(அகம்.120) எனவும் வரும். ஏனைய வந்துழிக் காண்க. உம்மையான், இளையரொடு வந்து தனித்துக் கூடுதலுங் கொள்க. “வல்வில் இளையரோ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ”
(அகம்.120) என்றாற்போல்வன கொள்க. இதனானே உடன்போக்கிலும், “கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறி கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ ஆறுசென் மாக்கள் நற்றோள் நயந்துபா ராட்டி எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே”
(ஐங்குறு.385) எனத் தேர் முதலிய ஏறிப்போதலுங் கொள்க.
(18) இது ஒரு சொல்வழுவமைத்தல்
|