நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3679
Zoom In NormalZoom Out


டு     பலர்  கூட்டமுங்  கோடற்கு  ஏனைப்பாலென்று  ஒருமையாற்
கூறாது   ‘எனைப்பா’   லெனப்   பன்மையாற்   கூறினார்.  இதனால்
சொல்வழுவும்   பொருள்  வழுவும்  அமைத்தார்.  ‘ஒத்த   கிழவனுங்
கிழத்தியும்’   (93)  என்ற  ஒருமையே  கொள்ளின்   அன்னாரிருவர்
இவ்வுலகத்துள்ளாரன்றி     வேறாக     நாட்டிக்    கொள்ளப்பட்டா
ரென்பதுபட்டு  இஃது  உலக வழக்கல்லாததொரு நூலுமாய்  ‘வழக்குஞ்
செய்யுளும்’  (தொல்.பாயிரம்)  என்பதனொடு  மாறுகோட  லேயன்றிப்
‘பரத்தை     வாயினால்வர்க்கு     முரித்தே’   (தொல்.பொ.224)
என்றாற்போல்வன பிற சூத்திரங்களும் வேண்டாவாமென் றுணர்க. (28)

எல்லாவுயிர்க்கும் இன்பமுரித்தெனல்
 

223. எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்.
 

இது, மேலதற்கொரு புறனடை.

(இ-ள்.)     இன்பம் என்பது தான் - அறனும் பொருளும் ஒழிய
இன்பமென்று கூறப்படுவதுதான்; எல்லா உயிர்க்கும் அமர்ந்து வரூஉம்
-   மக்களுந்   தேவரும்   நரகரும்   மாவும்   புள்ளும்   முதலிய
எல்லாவுயிர்களுக்கும்   மனத்தின்கண்ணே   பொருந்தித்  தொழிற்பட
வருமாயினும்;   மேவற்றாகும்   -  ஆணும்பெண்ணுமென  அடுக்கிக்
கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும் எ-று.

‘மேவற்றாகு’  மென்றார்;  என்பது  ஆணும்பெண்ணுமாய்ப் போக
நுகர்ந்து  வருதலின். ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தா ரெனப்
படாது  அவ்வின்பம்  எல்லாவுயிர்க்கும்  பொதுவென்பதூஉம் அவை
இருபாலாய்ப் புணர்ச்சி நிகழ்த்துமென்பதூஉங் கூறியதாயிற்று. அறனும்
பொருளும்  எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வருமென்றா
ராயிற்று.                                               (29)

ஊடல் தீர்க்கும் வாயில் நால்வர்க்குமுரித்தெனலும்
பரத்தையிற்பிரிவு ஒரே நிலத்தின்கண்ணதெனலும்
 

224. பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்
 

இது  தலைவர்க்குரிய  தலைவியர் பலருந் தலைவன் பரத்தைமை
காரணமாக  ஊடற்குரியரென்பதூஉம் அவரிடத்து வாயில் சேறற்குரியர்
என்பதூஉங் கூறி வழுவமைக்கின்றது.

(இ-ள்.) பரத்தை வாயில்   நால்வர்க்கும்  உரித்து  -  தலைவன்
பரத்தைமையால் தலைவிக்குத் தோன்றிய